காற்றில் பறக்கும் கிழிந்த பேனர்கள் விபத்து அபாயம்
காற்றில் பறக்கும் கிழிந்த பேனர்கள் விபத்து அபாயம்
ADDED : மே 17, 2026 11:35 PM

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகம் அருகே ப்ளக்ஸ் பேனர் கிழிந்து காற்றில் ஆடி விபத்து அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் பிளக்ஸ் பேனர் கலாசாரம் இன்னும் ஓயவில்லை. மெல்ல மெல்ல அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள், சுப நிகழ்ச்சிகளிலும் தலைதுாக்குகிறது. இவை ரோட்டோரங்களில் ஆபத்தான இடங்களில் வைக்கப்பட்டு சாய்ந்துள்ளன. அதே போல் சிலர் மின்கம்பங்களில் கட்டி வைத்து வருகின்றனர்.
ரோட்டின் ஓரம், பொது இடம் என எதுவும் பார்ப்பது கிடையாது. பிளக்ஸ் பேனரை நடைபாதையில் வைக்க கூடாது. குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு எடுக்க வேண்டும். அதன் உறுதித்தன்மையை போலீஸ், வருவாய்த்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை உயர் நீதிமன்றம் அளித்திருந்தது. அது எதுவுமே தற்போது பின்பற்றுவது கிடையாது.
பிளக்ஸ் பேனர் வைக்க போலீசாரின் அனுமதி அவசியம். தற்போது இதை போலீசாரும் பின்பற்றுவதில்லை. மக்களும் கண்டு கொள்வதில்லை. இதனால் பேனர் வைக்கும் கலாசாரம் இஷ்டத்திற்கு அதிகரித்து வருகிறது. கலெக்டர் அலுவலகம் அருகே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிழிந்த பேனர்கள் காற்று நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இப்போது கோடை என்றாலும், மாலை நேரங்களில் மழை பெய்யும் போது பலத்த காற்று அடிக்கிறது. இது போன்ற நேரங்களில் பேனர்கள் கிழிந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. விபத்து அபாயம் ஏற்படுத்தும் இவற்றை அகற்ற வேண்டும்.
