அடிப்படை வசதியின்றி 2வது பிளாட்பார்ம் :ரயில் பயணிகள் அவதி
அடிப்படை வசதியின்றி 2வது பிளாட்பார்ம் :ரயில் பயணிகள் அவதி
ADDED : ஏப் 19, 2026 10:25 PM
ராஜபாளையம்: ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷன் 2வது நடைமேடையில் தொடர்ந்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் 2வது பிளாட்பாரத்தில் நிறுத்தப்படுவதுடன் மின்விளக்கு, கூரை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் தவிக்கின்றனர்.
ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷன் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் நவீன காலத் திட்டத்தின் அடிப்படையில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது.
2022 டிச. தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் குறைந்தபட்ச அடிப்படை தேவைகள் ஏற்படுத்துதல், எஸ்கலேட்டர், மாற்று திறனாளிகளுக்கான வசதி, 5 ஜி சேவை என நீண்ட கால தேவியின் அடிப்படையில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில் தினசரி 2 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் உபயோகப்படுத்தும் ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் இரவு நேரத்தில் வரும் பொதிகை எக்ஸ்பிரஸ், மயிலாடுதுறை 2 வது பிளாட்பார்மில் நிறுத்தப்படுகிறது.
இங்கு ஏற்கனவே முழு அளவில் மேற்கூரை வசதி, மின்விளக்கு இல்லை, இலவச கழிப்பறை காட்சி பொருளாக உள்ளது. முதியோர்களுக்கான பேட்டரி வாகனம் செயல்பாட்டில் இல்லை.
இந்நிலையில் வெயில் மழை காலங்களில் பயணிகள் ஒதுங்க இடமின்றியும், 2வது பிளாட்பார்மிற்கு கடந்து செல்வதில் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதுடன் அதுவரை எக்ஸ்பிரஸ் ரயில்களை முதலாவது பிளாட்பார்மில் நிறுத்தி ரயில்களை இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
