UPDATED : நவ 05, 2026 11:47 PM
ADDED : நவ 04, 2026 06:07 PM
விருதுநகர்: விருதுநகர் அருகே வடமலைக்குறிச்சியில் டிரைக்கோடெர்மா, சூடோமோனாஸ் உள்ளிட்ட உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் குறித்து செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் ரசாயன மருந்துகளின் பயன்பாட்டைக் குறைத்து சுற்றுச்சூழலுக்கு உகந்த உயிரியல் பயிர் பாதுகாப்பு முறைகளை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண் உதவி இயக்குநர் ராமசாமி தலைமை வகித்தார். உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வக வேளாண் அலுவலர் அரிபுத்திரன், டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனாஸ், மெட்டாரைசியம், பேசில்லஸ் சப்டில்லிஸ், டிரைக்கோகிரம்மா, என்.பி.வி. வைரஸ் ஆகிய ஆறு உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளின் பயன்பாடு குறித்து செயல்விளக்கத்துடன் பயிற்சி அளித்தார்.
மேலும், உயிரியல் காரணிகளைப் பயன்படுத்தும் முறை, சரியான அளவு, சேமிப்பு மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையில் அவற்றின் பங்கு குறித்து விளக்கப்பட்டது.
