ADDED : ஜூலை 15, 2026 03:54 AM
நரிக்குடி: சிவகங்கை ஆவரங்காட்டை சேர்ந்த பழனிமுருகன், வீரசோழன் வாரச் சந்தை சென்று சரக்கு வேனில் ஊர் திரும்பினார். இருஞ்சிறை டாஸ்மாக் கடை அருகே சென்ற போது மது போதையில் இருந்த இருவர் ரோட்டில் வாளைக் காட்டி மிரட்டினர்.
டிரைவர் வேனை நிறுத்தாமல் சென்றதால் ஆத்திரமடைந்த அவர்கள், வேனைப் பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர். இருஞ்சிறை ரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால் வேன் நின்றது. வேன் டிரைவர் பழனிமுருகன், பாண்டிமுத்துவை வாளால் தாக்கி பலத்த காயம் ஏற்படுத்தினர். மேலும், அவ்வழியாக சென்றவர்களிடமும் ரகளையில் ஈடுபட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தாக்குதலில் ஈடுபட்ட இருஞ்சிறையை சேர்ந்த மாயா 21, ராஜபாண்டி 36ஐ நரிக்குடி போலீசார் கைது செய்து, வாளைப் பறிமுதல் செய்தனர்.
மலை வாழ் பெண்கள் மாயம்
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாணிப்பாறை ராம் நகரைச் சேர்ந்தவர் மாசானம். 26, இவரது மனைவி ஆனந்தராம ஈஸ்வரி 22, நேற்று முன்தினம் காலை தனது 3 வயது பெண் குழந்தையுடன் மாயமானார். இதேபோல் அதே பகுதியை சேர்ந்த பெரிய கருப்பன் மனைவி வனபேச்சி 25, என்பவரும் மாயமானார். இவ்விரு சம்பவங்கள் குறித்து வத்திராயிருப்பு போலீசார் தேடி வருகின்றனர்.
லாரி - டூவீலர் மோதல்: வாலிபர் பலி
சாத்துார்: வெம்பக்கோட்டை மஞ்சளோட பட்டியைச் சேர்ந்தவர் பெரியசாமி 36. துாத்துக்குடிமாவட்டம் கீழத் திருவேங்கடம் புரத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு டூவீலரில் (ஹெல்மெட் அணிந்திருந்தார்) வீடு திரும்பினார். செவல்பட்டி துலுக்கன்குறிச்சி ரோட்டில் ஓட்டல் அருகில் வந்த போது தென்காசி மாவட்டம் பேரி கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் 42.ஓட்டி வந்த டிப்பர் லாரி டூ வீலர் மீது மோதியதில் பெரியசாமி சம்பவ இடத்தில் பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபர் மீது போக்சோ வழக்கு
சாத்துார்: வெம்பக்கோட்டை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் வீராஜ் 22.18 வயது நிரம்பாத சிறுமியை காதலித்து திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார்.சிறுமி கர்ப்பமானதை தொடர்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்ற போது சிறுமிக்கு 18 வயது நிரம்பாதது தெரிய வந்தது. சாத்துார் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
