பட்டாசு கடைகளில் மிரட்டி வசூல்: போலி நிருபர்கள் இருவர் மீது வழக்கு
பட்டாசு கடைகளில் மிரட்டி வசூல்: போலி நிருபர்கள் இருவர் மீது வழக்கு
UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 06:04 PM

சிவகாசி: விருதுநகர் மாவட்டத்தில் சாத்துார், வெம்பக்கோட்டை, ஆலங்குளம் பகுதிகளில் உள்ள பட்டாசு கடை உரிமையாளர்களை மிரட்டி பணம் பறித்த போலி நிருபர்கள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சிங்காளந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள் முருகன் 32, ஆனந்த் 34. இவர்கள் இருவரும் நிருபர் எனக்கூறி போலி அடையாள அட்டையுடன் சாத்துார், வெம்பக்கோட்டை, ஆலங்குளத்தில் உள்ள பட்டாசு கடைகளுக்கு சென்றனர்.
உங்கள் கடையில் சட்டவிரோதமாக பட்டாசு விற்பனை நடக்கிறது; இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவு செய்வோம், எனக்கூறி கடை உரிமையாளர்களை மிரட்டி பணம் வசூலித்தனர்.
தொடர்ந்து இ.டி.ரெட்டியாபட்டியைச் சேர்ந்த சரவண பெருமாளின் பட்டாசு கடைக்கு சென்ற இருவரும், அவரிடம் ரூ.30,000 கேட்டனர். இதுகுறித்து சரவண பெருமாள் போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் ஆலங்குளம் போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
