ADDED : ஜன 09, 2026 06:01 AM
தளவாய்புரம் : விருதுநகர் மாவட்டத்தில் இரு வேறு தீ விபத்துக்களில் மூதாட்டி உட்பட இருவர் பலியாயினர்.
தளவாய்புரம் அடுத்த புத்துாரை சேர்ந்தவர் பெரிய குருசாமி 75. கூலித் தொழிலாளி. இவரது மூத்த மகன் இசக்கி பாண்டி 20; மூளை வளர்ச்சி குறைந்தவர். வீட்டின் பெயின்ட் பூச்சு பணி முடிந்து மீதம் இருந்த தின்னர், பெயின்ட் அலமாரியில் வைத்திருந்தார். எதிர்பாராத விதமாக தின்னர் இசக்கி பாண்டி மீது கொட்டி அருகில் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தி சரிந்து தீப்பிடித்ததில் உடலில் பலத்தகாயம் ஏற்பட்டது. விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். தளவாய்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மற்றொரு விபத்து சேத்துார் காளியப்பபிள்ளை தெருவை சேர்ந்தவர் வேலம்மாள் 75. கணவர் முத்தையா இறந்த நிலையில் தனது வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றும் போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பிடித்து காயம் ஏற்பட்டது. மதுரை மருத்துவமனையில் உயிரிழந்தார். சேத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

