விளைச்சல் குறைவால் கட்டுப்படியாகல: தென்னை விவசாயிகள் கவலை
விளைச்சல் குறைவால் கட்டுப்படியாகல: தென்னை விவசாயிகள் கவலை
UPDATED : அக் 13, 2026 05:48 AM
ADDED : அக் 13, 2026 01:38 AM

l விளைச்சல் குறைவால் தென்னை விவசாயிகள் கவலை
l அதிகரிக்கும் சாகுபடி செலவு, நோய்களால் பரிதவிப்பு
ராஜபாளையம்: அதிகரிக்கும் சாகுபடி செலவு, நோய் தாக்குதல், குறைவான கொள்முதல் விலை உட்பட பல்வேறு பிரச்னைகளால் மார்க்கெட்டில் விலை அதிகரித்தும் கட்டுபடியாகாததால் தென்னை விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
தேசிய அளவில் தமிழகம் தென்னை சாகுபடி, உற்பத்தி முதலிடத்திலும் சாகுபடி பரப்பளவில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. தமிழகத்தில் முக்கிய தொழிலாக தென்னை சாகுபடி இருந்து வருகிறது.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையடிவார விவசாய பகுதிகளில் தென்னை பிரதான இடம் பிடித்து வருகிறது. ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு பகுதிகளில் 10 ஆயிரம் ஹெக்டேர் அளவிற்கு தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.பராமரிப்பு குறைவு போன்ற காரணங்களால் இதில் விவசாயிகளின் ஈடுபாடு அதிகம்.
கடந்த ஆண்டு கிலோ ஒன்றுக்கு ரூ.65 வரை விற்ற தேங்காய் தற்போது ரூ.48 வரை வியாபாரிகள் மொத்த விலைக்கு கேட்கும் நிலை உள்ளது. சந்தையில் விலை மாறுபாடுகள் காரணமாக நிலையான வரவு என்ற சூழல் இல்லாத நிலை உள்ளது.
முன்பு தமிழகத்தில் இருந்து தேங்காய்கள் கர்நாடகா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலத்திற்கு மாதம் ஒன்றுக்கு ராஜபாளையம் சுற்று பகுதியில் இருந்து மட்டும் 60 லட்சம் தேங்காய்கள் வியாபாரிகள் அனுப்பி வந்தனர். அமாவாசை, சரஸ்வதி பூஜை போன்ற விழா காலங்களில் இதன் தேவைகள் பொருத்து விலை ஏற்றங்கள் இருக்கும். விலை குறைவு ஏற்பட்ட நாட்களில் மாற்று ஏற்பாடாக எண்ணெய் மார்க்கெட் ஆன கொங்கு பகுதிகளுக்கு அனுப்பி சமாளித்து வந்தனர்.
இந்நிலையில் அதிகரித்துள்ள வெள்ளை ஈக்கள், வண்டு துளைப்பான், குருத்து அழுகல், வாடல் நோய், இலைக்கருகல் உள்ளிட்ட பிரச்சனைகளோடு காலநிலை மாற்றங்களால் பாதிப்பு, வறட்சி போன்றவையும் சேர்ந்து தென்னை மரங்களிலிருந்து பாதியாக காய்கள் வரத்து குறைந்துள்ளது.
வரத்து குறைவினால் விலை அதிகரித்தாலும் உழவு, உரம், கூலி, பாதுகாப்பு, பராமரிப்பு என பெருகிவரும் சாகுபடி செலவுகள் அதிகரித்து வருவதால் விலை உச்சம் தொட்டாலும் கட்டுப்படி ஆகாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டி பரவலாக காணப்படும் வெள்ளை ஈக்களால் ஏற்பட்டுள்ள பாதிப்பினை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறைகளை மாவட்ட நிர்வாகம் முன்வந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
தற்போது ஒரு சில குறிப்பிட்ட மாதங்கள் மட்டுமே அரசு கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருவதை ஆண்டு முழுவதும் செயல் படுத்துவதுடன், தேங்காய்களை இ-நாம் மூலம் அரசு நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
