/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி.யில் கண்டுகொள்ளப்படாத மன்னர் கால நகரா மண்டபங்கள்
/
ஸ்ரீவி.யில் கண்டுகொள்ளப்படாத மன்னர் கால நகரா மண்டபங்கள்
ஸ்ரீவி.யில் கண்டுகொள்ளப்படாத மன்னர் கால நகரா மண்டபங்கள்
ஸ்ரீவி.யில் கண்டுகொள்ளப்படாத மன்னர் கால நகரா மண்டபங்கள்
ADDED : ஏப் 13, 2025 04:16 AM

ஸ்ரீவில்லிபுத்துார் : ராஜபாளையத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துார், கிருஷ்ணன் கோவில் வழியாக மதுரை வரை செல்லும் ரோட்டில் உள்ள ஏராளமான நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க மன்னர் காலத்து நகரா கல் மண்டபங்கள், மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால் தனிநபர் ஆக்கிரமிப்பு, சிதையும் நிலை, மதுபான கூடமாக மாறும் நிலைக்கு மாறுகிறது. இதனை சீரமைத்து பாதுகாக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரையை ராணி மங்கம்மாள் ஆட்சி செய்த காலத்தில் ஸ்ரீவில்லிபுத்துார், சங்கரன்கோவில், திருநெல்வேலி, திருச்செந்தூர் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய ராணியின் குடும்பத்தினர் செல்லும்போது இளைப்பாற வசதியாக நகரா கல் மண்டபங்கள், திருமங்கலம் முதல் கிருஷ்ணன்கோவில், ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், கரிவலம்வந்தநல்லூர், சங்கரன்கோயில், திருநெல்வேலி வழியாக திருச்செந்தூர் வரை அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்துாரில் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில் பின்புறம், தன்யா நகர் ஆர்ச் அருகில், பட்டத்தரசி அம்மன் கோயில், இந்திரா நகர், பூவாணி, சாலியன் தோப்பு, செண்பகத் தோப்பு பகுதிகளில் நுணுக்கமான சிற்பங்களுடன் கூடிய கல் மண்டபங்கள் உள்ளன.
தற்போதைய அறிவியல் தொழில்நுட்பத்தால் கூட கட்டமைக்க முடியாத இந்த கல் மண்டபங்கள் கடந்த பல ஆண்டுகளாக அறநிலையத்துறை, வருவாய்த்துறை, தொல்லியல் துறை என எந்தவித அரசு துறையின் கண்காணிப்பும் இல்லாமல் முறையாக பராமரிக்கப்படாமல், சுற்றுச்சுவர்கள் கல் தூண்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனை முறையாக பராமரிக்காவிட்டால் முழு அளவில் தூர்ந்து போய்விடும் நிலை உள்ளது.
இந்நிலையில் பல நகரா கல் மண்டபங்கள் தனிநபர் ஆக்கிரப்பிலும், மாலை 6:00 மணிக்கு மேல் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. சிறப்பு மிக்க இந்த கல் மண்டபங்களை எந்தவித அரசு துறையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஸ்ரீவில்லிபுத்துார் மக்களை மிகுந்த மன வேதனைக்கு ஆளாக்கி உள்ளது.
எனவே, இந்த கல் மண்டபங்களை தனிநபர் ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்டு புனரமைத்து பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.