/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருச்சுழியில் ஆளில்லா ரயில்வே கிராசிங்
/
திருச்சுழியில் ஆளில்லா ரயில்வே கிராசிங்
ADDED : அக் 19, 2024 04:31 AM

திருச்சுழி, : திருச்சுழி அருகே ரயில்வே சுரங்க பாதை பணி பாதியிலேயே கிடப்பில் போட்டதால் ஆளில்லா ரயில்வே கிராசிங்கை மக்கள் ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர்.
திருச்சுழி அருகே மிதிலை குளம் புளியங்குளம், மைலி உட்பட கிராமங்கள் உள்ளது. இங்கிருந்து விவசாயிகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அருப்புக்கோட்டைக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் மிதிலை குளம் புளியங்குளம் கிராமத்திற்கும், திருச்சுழி - நரிக்குடி செல்லும் ரோட்டிற்கு இடையே ஆளில்லா ரயில்வே கிராசிங் உள்ளது. இங்கு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது.
சில ஆண்டுகளுக்கு முன் பல லட்சம் நிதியில் சுரங்க பாலம் அமைக்கும் பணி நடந்தது. பாலத்தை முறையாக கட்டாததால் எதிரே வரும் வாகனங்கள்தெரியாத நிலை ஏற்பட்டு விபத்து ஏற்படும் வகையில் இருந்துள்ளது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாலப்பணி பாதியிலேயே கைவிடப்பட்டது.
தற்போது இந்த வழியாகத்தான் பாசஞ்சர் ரயில், எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில்கள் உட்பட செல்கின்றன. இருப்புப் பாதையில் ரயில்வே கேட் இல்லாததால் மக்கள் காலை, இரவு நேரங்களில் பயத்துடனே கடந்து செல்ல வேண்டி உள்ளது. ரயில்களின் நேரமும் சரிவர தெரியாததால் எந்த நேரத்தில் வரும் என்ற பயத்துடனே கடந்து செல்ல வேண்டி உள்ளது.
இந்த வழித்தடத்தில் கடந்த மாதம் மதுரையிலிருந்து தென்காசி வரை 121 கி.மீ., வேகத்தில்ரயில் சோதனை ஓட்டம்நடந்துள்ளது. பொது மக்களுக்கு எச்சரிக்கை மட்டும் ரயில்வே நிர்வாகம் விடுத்துள்ள நிலையில், கிடப்பில் போடப்பட்ட சுரங்கப்பாதை பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்பது கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.