/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
துார்வாராத வரத்து ஓடை, செயல்படாத மடைகள்
/
துார்வாராத வரத்து ஓடை, செயல்படாத மடைகள்
ADDED : அக் 09, 2025 04:11 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் வடமலைக்குறிச்சி கண்மாயில் கருவேல மரங்கள், ஆகாய தாமரைகள் வளர்ந்தும், கழிவுகள் கொட்டப்பட்டும், நீர்வரத்து பாதையில் செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டியும், கரைகள் மேடு பள்ளமாக சேதமடைந்தும் காணப்படுவதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் பாசன விவசாயிகள்.
ஸ்ரீவில்லிபுத்துார் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பேயனாறு, மறவன் குளம், மொட்ட பெத்தான் கண்மாய் வழியாகவும், ரெங்கர் கோயில், பிள்ளையார் நத்தம், கூட்டுறவு மில், சண்முகசுந்தரபுரம் வழியாகவும் 2 தண்ணீர் வரத்து பாதைகள் உள்ளது.
பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த கண்மாய் மூலம் 400 ஏக்கர் பரப்பளவில் நெல், வாழை, பருத்தி மற்றும் பல்வேறு பூச்செடிகள் பயிரிடப்பட்டு விவசாயம் நடந்து வந்தது.
ஆனால் இந்த கண்மாயின் நீர் வரத்து பாதைகள் அடைபட்டு கனமழை பெய்தால் மட்டுமே தற்போது நீர்வரத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 20 ஆண்டுகளுக்கு மேலாக கண்மாய் நிரம்பி மறுகால் விழாத நிலை தான் உள்ளது.
மொட்டபெத்தான் கண்மாயிலிருந்து குலாலர் தெரு, பெருமாள்பட்டி வழியாக வரும் நீர்வரத்து ஓடையில் செடி, கொடிகள் வளர்ந்தும், புதர் மண்டியும் கழிவுகள் கொட்டப்பட்டும் அடைப்பட்டு கிடந்தது. தற்போது மதுரை ரோடு பாலத்தின் மேற்கு பகுதி வரை ஓடை சுத்தம் செய்யப்பட்டிருந்தாலும், ராமகிருஷ்ணாபுரம் வடக்கு தெரு பின்பகுதியில் உள்ள நீர்வரத்து ஓடை சுத்தம் செய்யப்படாமல் உள்ளது.
கண்மாயின் நீர் பிடிப்பு பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது. மேலும் கருவேல மரங்கள், ஆகாயத்தாமரைகள் வளர்ந்தும், கழிவுகள் கொட்டப்பட்டும் உள்ளது.
பெரும்பள்சேரி முதல் சண்முகசுந்தரபுரம் வரை கண்மாய் கரைகள் மேடு, பள்ளமாகவும், போதிய அகலமின்றியும், சில இடங்களில் கரைகள் சேதமடைந்தும் காணப்படுகிறது.கண்மாய் நிரம்பி மறுகால் விழுந்தால் செங்குளம் கண்மாய்க்கு செல்லும் நீர்வரத்து பாதை மண்மேவி போதிய ஆழமில்லாமல் உள்ளது.
இதனால் பல ஆண்டுகளாக கண்மாய்க்கு தண்ணீர் வரத்து குறைந்ததால் விவசாயம் பாதிக்கப்பட்டு தற்போது பல விவசாயிகள் தரிசு நிலங்களாக விட்டுவிட்டனர்.
எனவே, கண்மாயை முழு அளவில் தூர்வாரியும், நீர் வரத்து பாதைகளை சுத்தம் செய்தும், கரைகளை பலப்படுத்தியும், கலிங்குகள், மடைகளை சீரமைத்தும் முறையாக பராமரிக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.