/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
துார்வாராத வாறுகால், செயல்படாத சுகாதார வளாகம்
/
துார்வாராத வாறுகால், செயல்படாத சுகாதார வளாகம்
ADDED : ஜூன் 20, 2025 12:14 AM

சிவகாசி: சேதமான ரோடு, துார் வாராத வாறுகால், செயல்படாத சுகாதார வளாகம் என சிவகாசி மாநகராட்சி 5 வது வார்டு திருத்தங்கல் ஓதுவார் சந்து, சுப்பிரமணியர் கோயில் தெரு பகுதி மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கித் தவிக்கின்றனர்.
திருத்தங்கல் ஓதுவார் சந்து சுப்பிரமணிய கோயில் தெரு பகுதியில் வாறுகால் துார்வாராதது, ரோடு சேதம் முக்கிய பிரச்னையாக உள்ளது. ஓதுவார் சந்து பகுதியில் இதுவரையிலும் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கவில்லை.
50 ஆண்டுகளுக்கு முன்பு உருவான இப்பகுதியை புதிதாக உருவாக்கப்பட்டது எனக் கூறி அதிகாரிகள் குழாய் பதிக்க மறுக்கின்றனர். ஓதுவார் சந்து பகுதி அருகில் நான்கு விலக்கு ரோடு பிரிந்து செல்கின்றது. இப்பகுதியில் டிராபிக் சிக்னல்கள் இல்லாததால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது. இப்பகுதிகளில் சேதமடைந்த மின் கம்பங்களால் குடியிருப்பு வாசிகள் அச்சத்தில் உள்ளனர்.
கர்ணன், தனியார் ஊழியர்: ஓதுவார் சந்து பகுதியில் புழக்கத்திற்கான தண்ணீர் வினியோகம் செய்வதற்காக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குழாய் பதிப்பதற்காக ரோடு தோண்டப்பட்டது. ஆனால் இதுவரையிலும் மீண்டும் ரோடு சீரமைக்கப்படவில்லை. இதனால் குடியிருப்புவாசிகள் நடந்து செல்வதற்கே சிரமப்படுகின்றனர்.
லட்சுமி, குடும்பத் தலைவி: இப்பகுதியில் தெருக்களில் வாறுகால் துார்வார வில்லை. இதனால் கழிவு நீர் ஒரே இடத்தில் தேங்கி துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. தவிர சிறிய மழை பெய்தாலும் கழிவுநீர் தெருவில் ஓடுவதோடு வீட்டிற்குள் புகுந்து விடுகின்றது. எனவே உடனடியாக வாறுகாலை துார்வார வேண்டும்.
பிச்சையம்மாள், குடும்பத்தலைவி: இப்பகுதியில் 2013 ல் நவீன சுகாதார வளாகம் கட்டப்பட்டது. சில ஆண்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த நிலையில் தற்போது பயன்பாட்டில் இல்லை. மேலும் சுகாதார வளாகம் சேதம் அடைந்து விட்டது. இதனால் இப்பகுதி பெண்கள் அருகில் உள்ள வார்டுக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே சுகாதார வளாகத்தில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு மின்சாரம், தண்ணீர் வசதி ஏற்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
பொன்னீஸ்வரி, குடும்பத் தலைவி: நகரில் ஒட்டு மொத்த கழிவுகளும் இப்பகுதியில் உள்ள பெரிய வாறுகால் வழியே செல்கின்றது. ஆனால் துார்வாரப்படாததால் கழிவு நீர் அடைபட்டு விடுகின்றது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.