/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் வைப்பாற்றில் பாழாகும் உறை கிணறுகள் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தல்
/
சாத்துார் வைப்பாற்றில் பாழாகும் உறை கிணறுகள் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தல்
சாத்துார் வைப்பாற்றில் பாழாகும் உறை கிணறுகள் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தல்
சாத்துார் வைப்பாற்றில் பாழாகும் உறை கிணறுகள் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 26, 2025 03:19 AM

சாத்துார் : சாத்துார் வைப்பாற்றில் குடிநீர் உறை கிணறுகள் அருகில் கழிவு நீர் கலப்பதால் குடிநீர் உப்புச் சுவையாக மாறி வருகிறது. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
வெம்பக்கோட்டையில் உற்பத்தியாகும் வைப்பாறு நதி சல்வார் பட்டி, அச்சங்குளம் ,இறவார் பட்டி, சங்கர நத்தம், ரெங்கப்பநாயக்கன்பட்டி ,படந்தால் வழியாக சாத்துார் வந்தடைகிறது.
சல்வார் பட்டி ,அச்சங்குளம், இறவார்பட்டி ,படந்தால் என 10 க்கும் மேற்பட்ட ஊராட்சிகளின் குடிநீர் உறை கிணறுகள் வைப்பாற்றில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குடிநீர் உறை கிணறுகளே ஊராட்சியில் வசிக்கும் மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. மேலும் காட்டுப் பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளுக்கு தண்ணீர் காட்டவும் வைப்பாறு நதி பயன்பட்டு வருகிறது.
இந்நிலையில் வெம்பக்கோட்டை, இறவார் பட்டி சல்வார் பட்டி சங்கர நத்தம் படந்தால் என பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் இருந்து வெளியாகும் கழிவுநீர் முழுவதும் ஆற்றில் கலந்து வருகிறது.
இந்த கழிவு நீரில் பட்டாசு ஆலை கழிவுகளும் தீப்பெட்டி ஆலைகளின் ரசாயன கழிவுகளும் சேர்ந்து கழிவுநீராக ஆற்றில் கலந்து வருவதால் ஆற்று தண்ணீர் உப்புச் சுவையாக மாறிவிட்டது.
இதன் காரணமாக ஆற்றில் உள்ள உறை கிணறுகள் மூலம் தண்ணீர் எடுக்கும் ஊராட்சிகளில் இந்த தண்ணீர் முழுவதும் குடிநீராக பயன்படுத்தப்படாமல் குளிப்பதற்கும் துணி துவைப்பதற்கும் என புழக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் உள்ளூர் குடிநீர் ஆதாரம் இருந்த போதும் தாமிரபரணி மானுார் என வெளியூரில் இருந்து வரும் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நம்பியே மக்கள் வசிக்கும் நிலை உள்ளது.
உள்ளூர் குடிநீர் ஆதாரமான ஆற்றை காப்பாற்ற வைப்பாறு வடிநிலப்பகுதி மீட்பு இயக்கம், தடம் போன்ற தன்னார்வ அமைப்புகள் ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என கலெக்டரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.
குழாய் உடைப்பு மற்றும் மின் வெட்டு காரணமாக கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் பெறப்படும் தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டால் நகர், ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.
கழிவுநீர் கலப்பதால் வைப்பாறு கரை ஓரம் வசிக்கும் மக்கள் துர்நாற்றத்தால் அவதிப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. நீண்ட காலமாக இப்பிரச்னை தீர்க்கப்படாமல் உள்ளது.
நடவடிக்கை இல்லை ராஜ்குமார், வியாபாரி: ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும். குடிநீர் உறைகிணறுகளை துார்வாரி மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் . என 5 முறை கலெக்டரிடம் மனு கொடுத்தும் பலனில்லை. தன்னார்வ தொண்டு அமைப்பினர் ஆற்றில் உள்ள முள் செடியை சுத்தம் செய்ய தயாராக உள்ளனர் . ஆனால் அவர்களுக்கு அரசு அனுமதி தர மறுத்து வருகிறது. வைப்பாறு முள் காடாக மாறிவிட்டது.
குடிநீரை விலைக்கு வாங்கும் அவலம் கார்த்திக், தடம் தொண்டு நிறுவன உறுப்பினர்: அண்ணா நகர் ,மேல காந்தி நகர், கீழக் காந்தி நகர் ,அமீர் பாளையம், புதுப்பாளையம் ,போக்குவரத்து நகர் பகுதி மக்களுக்காக ஆற்றுக்குள் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிணற்றில் எடுக்கப்படும் தண்ணீர் உப்பு சுவையாக உள்ளதால் வேறு வழியின்றி மக்கள் வண்டிகளில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் மினரல் வாட்டரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். நகராட்சி விநியோகம் செய்யும் குடிநீரும் கலங்கலாக உள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர். உறை கிணறுகள் அமைத்தும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அரசின் நிதி வீணாகி வருகிறது.
தீர்வு ஆற்றில் கழிவு நீர் கலக்கும்ஓடைகளை கண்டறிந்து அவற்றை ஒருங்கிணைத்து வாறுகால் கட்ட வேண்டும். இந்த வாறு கால் மூலம் தரப்படும் கழிவு நீரை சாத்துார் நகராட்சியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வந்து சுத்திகரிப்பு செய்த பின்னர் ஆற்றில் கலக்கச் செய்வதன் மூலம் ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்கலாம். இதன் மூலம் குடிநீர் உறை கிணறுகள் அருகில் கழிவுநீர் தேங்குவதை தடுக்கலாம்.ஆறும் சுத்தமாகும்.