/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
'கவனிப்பால்' திடீரென முளைக்கும் காய்கறி சந்தைகள்
/
'கவனிப்பால்' திடீரென முளைக்கும் காய்கறி சந்தைகள்
ADDED : ஆக 26, 2025 03:19 AM

விருதுநகர்: விருதுநகரில் நகராட்சி ஊழியர்களை 'கவனித்து' நகர்ப்பகுதிக்குள் திடீரென முளைக்கும் காய்கறி சந்தைகளால் போக்குவரத்து நெரிசல், குடியிருப்போர் சிரமப்படும் பிரச்னை உள்ளது. ஏற்கனவே புது பஸ் ஸ்டாண்டில் புதன் கிழமை தோறும் செயல்பட்ட மார்க்கெட் தற்போது மாயமாகி விட்டது. நகராட்சி நிர்வாகம் இதை ஒழுங்குப்படுத்த வேண்டும்.
விருதுநகரில் முழுமையான காய்கறி சந்தை வசதி இல்லை என்ற ஏக்கம் மக்கள் மத்தியில் நீண்ட காலமாக உள்ளது. விருதுநகரின் உள் தெருவில் ஆங்காங்கே கடைகள் ஏற்படுத்தப்பட்டு காய்கறிகள் விற்கப்படுகின்றன. இவை தனியார் கடைகளே. நகராட்சிக்கு என காய்கறி சந்தை எதுவுமில்லை. அதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. தற்போது பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே சைக்கிள் ஸ்டாண்ட் இருந்த பகுதியில் வணிக வளாகம் நகராட்சி சார்பில் கட்டப்படுகிறது. ஆனால் காய்கறி மார்க்கெட் கட்டியிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும் என மக்கள் நம்புகின்றனர். அது பற்றி பரீசிலனை செய்யவோ, கோரிக்கை கேட்கவே நகராட்சி நிர்வாகம் வாயை திறப்பதில்லை.
இந்நிலையில் புதிய முயற்சியாக புது பஸ் ஸ்டாண்டில் புதன் தோறும் வாரச்சந்தை என அறிமுகப்படுத்தினர். ஆனால் அதை முறையாக கவனிக்காமல் விட்டதால் நாளடைவில் மக்கள் வருவதும், வியாபாரிகள் வருவதும் குறைந்து விட்டதால் வாரச்சந்தை மாயமாகி விட்டது. ஆனால் நகரின் பிற பகுதிகளில் அது முளைக்க துவங்கிவிட்டது.
நகராட்சி வார்டு 15ல் ஏ.ஏ.ரோட்டில் நகராட்சி அனுமதியின்றி 'ஊழியர்களை கவனித்து' திங்கள் தோறும் ரோடுகளை ஆக்கிரமிப்பு செய்து காய்கறி கடைகள் போட்டு அப்பகுதி குடியிருப்போருக்கு, பாண்டியன் நகர் வழியாக வருவோர் செல்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றனர்.
இடம்பிடிப்பதில் தகராறால் சட்ட ஒழுங்கு பாதிப்பும், போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் சிரமங்களையும் சந்திக்கின்றனர். சந்தை முடிந்த பின் இப்பகுதியில் காய்கறி கழிவுகள், குப்பை பயன்படுத்தப்படுகிறது. இது குறித்து 15வது வார்டு கவுன்சிலர் ரோகிணி கலெக்டர் சுகபுத்ரா, நகராட்சி கமிஷனர் சுகந்தி ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளார்.
இப்பகுதியில் சந்தை அமைப்போர் விவசாயிகள், அவர்களிடம் இருந்து கொள்முதல் செய்வோரே. இவர்கள் மருத்துவமனை எதிரே போட்டு வந்தனர். அதன் பின் ஐ.சி.ஏ., காலனி குறுக்கு தெருக்கள், தற்போது ஏ.ஏ.ரோடு பகுதியில் போட்டுள்ளனர். இந்த சந்தை பாண்டியன் நகர் பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. காரணம், இடநெருக்கடியில் உள்ள மெயின் பஜார் காய்கறி சந்தையில் வாங்கி வருவதற்குள் மூச்சுத்திணறல் தான் மிச்சம் என புலம்புகின்றனர். ஆனால் நகர்ப்பகுதிகளில் இருப்போருக்கு மார்க்கெட் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
விருதுநகருக்கு காய்கறி மார்க்கெட் என்ற ஒன்று தேவையாக உள்ளது. ஆனால் அதை நிர்வகிக்க நகராட்சி நிர்வாகம் முன் வராமல் உள்ளது. அதே நேரம் இவ்வாறு கடை போட்ட வியாபாரிகளிடம் நகராட்சி ஊழியர்கள் பணமும் பெற்றுவிடுகின்றனர். நகராட்சி மார்க்கெட் ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயமாகி உள்ளது. நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.