/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சத்தியமூர்த்தி ரோட்டை கடப்பதில் திண்டாட்டம் பரிதவிப்பில் விருதுநகர் வாகன ஓட்டிகள்
/
சத்தியமூர்த்தி ரோட்டை கடப்பதில் திண்டாட்டம் பரிதவிப்பில் விருதுநகர் வாகன ஓட்டிகள்
சத்தியமூர்த்தி ரோட்டை கடப்பதில் திண்டாட்டம் பரிதவிப்பில் விருதுநகர் வாகன ஓட்டிகள்
சத்தியமூர்த்தி ரோட்டை கடப்பதில் திண்டாட்டம் பரிதவிப்பில் விருதுநகர் வாகன ஓட்டிகள்
ADDED : டிச 08, 2025 05:32 AM

விருதுநகர்: விருதுநகர் நகராட்சி பகுதியில் ரயில்வே தண்டவாளத்திற்கு அருகே உள்ள பகுதிகளுக்கு செல்வதற்காக சத்தியமூர்த்தி ரோடு அமைக்கப்பட்டது. இந்த ரோட்டில் ஆங்காங்கே பள்ளங்களாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப் படுகின்றனர்.
விருதுநகர் அரசு மருத்துவமனை ரோட்டில் இருந்து ரயில்வே தண்டவாளத்தை கடந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி சத்தியமூர்த்தி ரோடு அமைக்கப்பட்டது.
மேலும் விருதுநகரின் முக்கியமான இரு ரயில்வே கேட்களை கடந்து தனியார் மருத்துவமனைகள், கடைகள், உணவகங்கள் உள்பட பல்வேறு விற்பனை நிலையங்களுக்கு மக்கள் சென்று வருவதற்கு சத்தியமூர்த்தி ரோடு முக்கிய பகுதியாக இருப்பதால் காலை முதல் இரவு வரை எப்போதும் போக்குவரத்து நிறைந்த பகுதியாக உள்ளது.
ரோட்டின் ஓரங்களில் அதிக அளவில் கடைகள் நிறைந்திருப்பதால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தினந்தோறும் அதிக அளவில்வந்துசெல்கின்றனர். ஆனால் சத்திய மூர்த்தி ரோடு தார் ரோடாக அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் இதுவரை பராமரிக்கப்படவில்லை. இதனால் ரோடு முழுவதும் பள்ளங்களால் நிறைந்துள்ளது.
மழைக்காலங்கள் வந்தால் பள்ளங்கள் முழுவதும் தற்போது சேறும், சகதியுமாக மாறிவிடும்.
குழந்தைகள், பெரியவர்களை வெளியே டூவீலரில் அழைத்து செல்லும் போது பள்ளங்கள் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். இரவில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவது தொடர் கதையாக மாறியுள்ளது.
நகராட்சி நிர்வாகத்தால் முறையாக அமைக்கப்படாத பாதாளச்சாக்கடை திட்டத்தால் ஒவ்வொரு முறையும் மேன்ஹோல் வழியாக கழிவுநீர் வெளியேறி ரோட்டில் ஆறாக ஓடுகிறது. பள்ளங்களில் கழிவு நீர், மழை நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் தினமும் அவ்வழியாக செல்பவர்கள் சிரமப்படுகின்றனர்.
நகரின் பல பகுதிகளில் தற்போது சிறு பாலம், தரைப்பாலம் கட்டும் பணிகள் நடப்பதால் மாற்றுப்பாதையில் மாற்றி விடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அல்லல்படுகின்றனர். மாவட்ட தலைநகருக்கு தகுதியில்லாத நகராட்சி என அனைத்து மக்களும் குற்றம்சாட்டும் நிலைக்கு உருவாகி யுள்ளது.

