ADDED : ஜூன் 08, 2025 11:22 PM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியில் பல்வேறு தெருக்களில் குடிநீர் சப்ளை நாட்கள் இடைவெளி அதிகரித்து வருவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை தவிர்க்க சீரான நாட்களில் குடிநீர் சப்ளை செய்வதை நகராட்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியில் 33 வார்டுகளில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளில் குடிநீர் இணைப்புகள் உள்ளது. உள்ளூர் செண்பகத் தோப்பு நீர் ஆதார மூலம் சில வார்டுகளிலும், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பெரும்பாலான வார்டுகளிலும் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
இதில் கடந்த சில வாரங்களாக குழாய் உடைப்பின் காரணமாக பல வார்டுகளில் குடிநீர் சப்ளை நாட்கள் இடைவெளி அதிகரித்து காணப்படுகிறது. இது மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு ஒரு முறை அல்லது வாரத்திற்கு ஒரு முறையாவது சீரான இடைவெளியில் அனைத்து வார்டுகளிலும் போதிய குடிநீர் சப்ளை செய்வதை நகராட்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.