/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேக்கம்
/
ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேக்கம்
ADDED : ஆக 25, 2025 02:40 AM

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வரலொட்டியில் இருந்து பாலவநத்தம் செல்லும் ரோட்டில் அமைக்கப்பட்ட ரயில்வே சுரங்கப்பாதையில் மழையால் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் சிரமத்தை போக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகரில் இருந்து மல்லாங்கிணர் செல்லும் ரோட்டில் வரலொட்டி அருகே பாலவநத்தம் செல்ல அமைக்கப்பட்ட ரோட்டில் ரயில்வே தண்டவாளம் சென்றது. இதை கடந்து செல்ல ஏதுவாக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்வே சுரங்கப்பாதையை கடந்து தினமும் மில்கள், ஆலைகளுக்கு நுாற்றுக்கணக்கான டூவீலர்களில் பணிக்கு சென்று வருகின்றனர்.
மேலும் மல்லாங்கிணர், வரலொட்டி, ரெட்டியப்பட்டி, அழகியநல்லுார், துலுக்கன்குளம், அதனை சுற்றிய பகுதிகளில் இருந்து பாலவநத்தம், இருக்கன்குடி, அருப்புக்கோட்டைக்கு சென்று வர ரயில்வே சுரங்கப்பாதையை பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை மழை பெய்யும் போது எல்லாம் தண்ணீர் தேங்குவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தற்போது முழங்கால் அளவு தண்ணீர் சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கிறது. இதை கடந்து டூவீலர்கள், லோடு வேன்கள் செல்ல முடியாமல் அப்படியே நிற்பதால் வாகனத்தை விட்டு இறங்கி தள்ளிச்செல்லும் நிலையே தொடர்கிறது.
எனவே வரலொட்டியில் இருந்து பாலவநத்தம் செல்லும் ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காமல் இருக்க மற்ற பகுதிகளில் அமைக்கப்படுவதை போல தகர செட் அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.