/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வைப்பாற்றில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்
/
வைப்பாற்றில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்
வைப்பாற்றில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்
வைப்பாற்றில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்
ADDED : மே 13, 2025 06:26 AM
சாத்துார் : சாத்துார்வைப்பாற்றில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்.
சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் சித்ரா பவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 7:00 மணிக்கு சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். பச்சை பட்டு உடுத்தி மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமியை பெரிய கொல்லப்பட்டி கிராம மக்கள் நான்கு ரத வீதி வழியாக வலம் வரச் செய்து வைப்பாற்றில் பகல் 12:00 மணிக்கு எழுந்தருள செய்தனர்.
ஆற்றில் திருக்கண்ணில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நல்ல விளைச்சல் வேண்டி சுவாமி ரத வீதியில் வலம் வரும்போது பருத்தி வத்தல் உள்ளிட்ட தானிய வகைகளை விவசாயிகள் சூறை வீசி வணங்கினர்.
மேலும் பக்தர்கள் பலரும் துாப தீபம் ஏற்றியும் சர்க்கரை தீபம் ஏற்றியும் வழிபட்டனர்.பலர் முடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதன் பின்னர் பெரிய கொல்லப்பட்டி சென்ற சுவாமி அங்கு நான்கு ரத வீதி வழியாக வலம் வந்து இரவு வைப்பாற்றில் எழுந்தருளி சித்ரா பவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு நடந்த வான வேடிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மே 14 காலையில் கருட வாகனத்தில் சுவாமி மீண்டும் கோயிலை வந்தடைவார்.
* ஸ்ரீவில்லிபுத்துாரில் நேற்று காலை 9:00 மணிக்கு ஆண்டாள் மஞ்சள் பட்டு உடுத்தி சேஷ வாகனத்திலும், ரெங்க மன்னார் பச்சை பட்டு உடுத்தி குதிரை வாகனத்திலும் எழுந்தருளி ஆத்துக்கடை சந்திப்பு வந்தடைந்தனர். காலை 10: 20 மணிக்கு வையாளி சேவை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராம ராஜா தலைமையில் செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர். வி.பி.எம்.எம்.கல்வி நிறுவனங்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
* வத்திராயிருப்பு சேதுநாராயண பெருமாள் கோயிலில் நேற்று அதிகாலை மூலவர் மற்றும் உற்ஸவருக்கு சிறப்பு திருமஞ்சன பூஜைகள் நடந்தது. பின்னர் கள்ளழகர் அலங்காரத்தில் பெருமாள் குதிரை வாகனத்தில் அர்ஜுனா நதியில் இறங்கி 3 முறை வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை 4:00 மணிக்குமேல் சேஷ வாகனத்திலும், 6:00 மணிக்குமேல் கருட வாகனத்திலும் பெருமாள் வீதியுலா எழுந்தருளினர்.
* விருதுநகரில் ரெங்கநாதசுவாமி கோயிலில் சுவாமி தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி ராமமூர்த்தி ரோடு பாலம் வழியாக அருப்புக்கோட்டை ரோடு, சிவனுாரணி செல்வ விநயாகர் கோயில், முதியோர் இல்லம் வரை சென்று எதிர்சேவை புரிந்து பின் நகர்வலம் வந்து தேசப்பந்து மைதானத்தில் வெயிலுகந்தம்மன் கோயில் முன்பு வீற்றிருந்தார். தசாவதார காட்சிகள், மோகினி அவதார நிகழ்ச்சிகள் நடந்தன.
ஏற்பாடுகளை விருதுநகர் ஹிந்து நாடார் தேவஸ்தான பருத்தி விதைக்கடை மகமை பகண்டு விழாக்கட்டியார் செய்தனர்.