ADDED : அக் 12, 2025 06:37 AM

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நேற்று பகலில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலையில் விருதுநகர், அருப்புக்கோட்டையில் கனமழை கொட்டி தீர்த்து பகல் நேர வெப்பத்தை தணித்தது.
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
ஆனால் நேற்று மதியம் 3:00 மணிக்கு மேல் மழை மேக கூட்டங்கள் உருவாகி விருதுநகரில் மதியம் 3:45 மணி முதல் கனமழை பெய்ய துவங்கியது.
இதே போல அருப்புக்கோட்டையில் மாலை 4:15 மணிக்கு துவங்கி மாலை 5:45 மணி வரை கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனால் நகரின் பல பகுதிகளில் மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். பள்ளி, கல்லுாரி முடியும் நேரத்தில் மழை பெய்ததால் மாணவர்கள் மழையில் நனைந்தபடி வீடு திரும்பினர்.
காரியாபட்டியில் மாலை 5:30 மணி முதல் மாலை 6:00 மணி வரையும், சிவகாசி, திருத்தங்கல்லில் மாலை 5:00 மணிக்கு மேல் சாரல் மழை பெய்ததது.
சாத்துார், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார், அதனை சுற்றிய பகுதிகளில் மாலையில் மழை எதுவும் பெய்யாமல் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை மட்டும் நிலவியது.