/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலை பணிகள் விரைவில் துவங்குமா
/
ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலை பணிகள் விரைவில் துவங்குமா
ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலை பணிகள் விரைவில் துவங்குமா
ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலை பணிகள் விரைவில் துவங்குமா
ADDED : ஜூன் 20, 2025 11:49 PM
சிவகாசி: ஸ்ரீவில்லிபுத்துார் - ராமேஸ்வரம் நான்கு வழி சாலை அமைக்கும் பணிக்கு அளவீடு நடந்து வரும் நிலையில் ரோடு போடு பணி எப்போது துவங்கும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்தியாவில் பிரசித்தி பெற்ற ஆன்மிக நகரான ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து ஆண்டு முழுவதும் பக்தர்கள் வருகின்றனர். ராமேஸ்வரம் செல்வதற்கு மதுரை வழியாக செல்லும் கொச்சி - தனுஷ்கோடி வழியே பிரதான ரோடாக உள்ளது. இதில் மதுரை முதல் பரமக்குடி வரை நான்கு வழிச்சாலையாகவும், பரமக்குடி முதல் ராமேஸ்வரம் வரை இரு வழிச்சாலையாகவும் உள்ளது.
விருதுநகர், தென்காசி மாவட்ட மக்கள் மதுரை வந்து கொச்சி - தனுஷ்கோடி ரோடு வழியாகவே ராமேஸ்வரம் சென்று வருகின்றனர். விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, பார்த்திபனுார், பரமக்குடி வழியாக ரோடு வசதி இருந்தும் ரோடு குறுகலாக இருப்பதாலும், பஸ் வசதி இல்லாததாலும் மக்கள் மதுரை வழியாகவே ராமேஸ்வரம் சென்று வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் ,- சிவகாசி -, விருதுநகர் - ,அருப்புக்கோட்டை ,- நரிக்குடி ,- பார்த்திபனுார் ,- பரமக்குடி ரோட்டை (எஸ்.ஹெச்.42) அகலப்படுத்தி, நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
சிவகாசியில் தொடங்க உள்ள சுற்றுச்சாலை திட்டத்துடன் சேர்த்து நான்கு வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் திட்ட அறிக்கை தயாரிப்பது குறித்து 2024 செப். ல் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் - ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலை திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் தென்காசி, விருதுநகர் மக்கள் மதுரை செல்லாமல் ராமேஸ்வரம் செல்வதுடன், 30 கிலோ மீட்டர் வரை பயண துாரம் குறையும். இத்திட்டம் நிறைவேறினால் மதுரை - கொல்லம், மதுரை - கன்னியாகுமரி, கொச்சி - தனுஷ்கோடி நான்கு வழிச்சாலைகளை இணைக்கும் வகையில் புதிய நான்கு வழிச்சாலை வழித்தடம் உருவாகும் என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இத்திட்டம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து பல மாதங்கள் ஆன நிலையிலும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்துார் ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலை பணிகளை விரைவில் துவக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில்: ஸ்ரீவில்லிபுத்துார் - சிவகாசி - விருதுநகர் - அருப்புக்கோட்டை - நரிக்குடி - பார்த்திபனூர் - பரமக்குடி சாலை(எஸ்.ஹெச்.42) விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்காக திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் திருத்தங்கலில் இருந்து விருதுநகர் வரை நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளது. விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை திருச்சுழி நரிக்குடியிலும் விரைவில் அளவீடு பணிகள் முடிவுக்கு வர உள்ளது. இப்பணிகள் முடிந்தவுடன் நிதி ஒதுக்கப்பட்டு ரோடு போடும் பணி துவங்க வாய்ப்பு உள்ளது, என்றனர்.