ADDED : மே 17, 2026 03:53 AM
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலுகாவில் கோடை நெல் அறுவடை துவங்கியுள்ள நிலையில் கான்சாபுரம், கூமாபட்டி, வத்திராயிருப்பு, தம்பிபட்டி, சுந்தர பாண்டியம் பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட நிர்வாகம் உடனே திறக்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
வத்திராயிருப்பு தாலுகாவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான அத்தி கோயில், கான்சாபுரம், பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகள், நெடுங்குளம், கொடிக்குளம், வத்திராயிருப்பு, புதுப்பட்டி, சுந்தரபாண்டியம், தம்பி பட்டி, மகாராஜபுரம், தாணிப்பாறை உட்பட பல்வேறு கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி நடந்து வருகிறது.
தற்போது கோடை சாகுபடி துவங்கி நெற்கதிர்கள் நன்றாக வளர்ந்துள்ள நிலையில் ஒரு சில இடங்களில் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலான இடங்களில் எதிர்வரும் நாட்களில் அறுவடை செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் வத்திராயிருப்பு, கான்சாபுரம், கூமாபட்டி, தம்பி பட்டி, சுந்தர பாண்டியம் உட்பட பல்வேறு இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வத்திராயிருப்பு பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
