/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோட்டின் இருபுறமும் பசுமை சூழல்: வளர்த்தது பெண்களின் கரங்கள்
/
ரோட்டின் இருபுறமும் பசுமை சூழல்: வளர்த்தது பெண்களின் கரங்கள்
ரோட்டின் இருபுறமும் பசுமை சூழல்: வளர்த்தது பெண்களின் கரங்கள்
ரோட்டின் இருபுறமும் பசுமை சூழல்: வளர்த்தது பெண்களின் கரங்கள்
ADDED : ஏப் 28, 2025 05:27 AM
வெயிலில்தான் நிழலின் அருமை தெரியும் என்பர். அது போல தான் தற்போதுள்ள சூழ்நிலை இருக்கிறது, வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கத்தால் புழுக்கம் அதிகரித்து வருகிறது. நடந்து சென்றால் மயங்கி விழும் அளவிற்கு கொதிக்கிறது. ஒதுங்கி நிற்க இடம் கிடைக்காதா என நெஞ்சம் நிழலை தேடுகிறது. இதையடுத்து மரங்களை வளர்க்க வேண்டும் என்கிற எண்ணம் பலருக்கும் ஏற்பட்டிருப்பது வரவேற்கத்தக்க ஒன்று.
ரோடு விரிவாக்கத்தால் பெரும்பாலான ரோட்டோரத்தில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டு வெறிச்சோடி கிடக்கிறது. வாகனங்களில் சென்றால் கூட வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. ரோட்டோரங்களில் மரக்கன்றுகளை வளர்க்க பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதையடுத்து பெரும்பாலான ரோடுகளில் மரக்கன்றுகளை நட்டு வருவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. அந்த அடிப்படையில் காரியாபட்டி விருதுநகர் ரோட்டில் அச்சங்குளத்தில் ரோட்டோரத்தில் மரக்கன்றுகளை வளர்க்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
புங்கை, வேம்பு, பூவரசு, மகாகனி, வாகை என பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன. இதனை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் தீவிர முயற்சி எடுத்தது. இதற்காக 100 நாள் வேலை திட்ட பெண்களை ஈடுபடுத்தினர். ஆடு, மாடுகள் கடித்து விடாதபடி முள்வேலி அமைத்து பாதுகாத்தனர். தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு, தினமும் குடங்களில் தண்ணீர் எடுத்து ஊத்தினர். 2 கி.மீ., தூரத்திற்கு, 600 மரக்கன்றுகள் வரை நடப்பட்டன.
தற்போது ரோட்டோரங்களில் மரக்கன்றுகள் வளர்ந்து நிற்குது மரங்களாக. இதனை வளர்க்க 100 நாள் வேலை திட்ட பெண்கள் இருந்தனர் கரங்களாக. தற்போது பார்க்க அழகாக, ரம்மியமாக இருப்பதால், அப்பகுதியில் போவோர் வருவோர் வெயிலின் தாக்கம், குறைவாக இருப்பதை உணர்கின்றனர். தொடர்ந்து பெண்கள் கண்காணித்து வருவது கூடுதல் சிறப்பு.
ஊரைச் சுற்றி சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து கிடந்தன. இதனை அப்புறப்படுத்தி மரக்கன்றுகளை வளர்க்க வேண்டும் என முடிவு செய்தேன். தண்ணீர் பிரச்னை இருந்தது. நீண்ட தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டும். இதற்காக எனது சொந்த நிதியில் தண்ணீர் தொட்டி கட்டி தினமும் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது மரங்களாக வளர்ந்து நிற்பதை பார்க்கும் போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
- ராஜேஸ்வரி, முன்னாள்ஊராட்சி தலைவர்