ADDED : மார் 24, 2026 04:47 AM
விருதுநகர்: சாத்துார் தாயில்பட்டி ரோட்டில் நேற்று காலை 7:00 மணிக்கு ரெங்கநாயகி வரதராஜ் கல்லுாரி அருகில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் கிருஷ்ணவேணி தலைமையில் போலீசார் வாகன சோதனை செய்தனர்.
அவ்வழியாக துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கருப்பசாமி, 50. ஓட்டி வந்த காரில் உரிய ஆவணம் இன்றி ரூ 1 லட்சம் இருப்பது தெரிய வந்தது. அதை பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
*தேர்தல் பறக்கும் படை அலுவலர் கற்பகம் தலைமையில் நேற்று மாலை 4:00 மணிக்கு போலீசார் ஏழாயிரம் பண்ணை இ. ரெட்டியபட்டி விலக்கில் வாகன சோதனை செய்து கொண்டிருந்த போது வெம்பக்கோட்டை இ.டி. ரெட்டியபட்டியை சேர்ந்த ராமச்சந்திரன், 49. ஓட்டி வந்த காரை சோதனை செய்தபோது அதில் ஆவணம் இன்றி ரூ 66,450 இருப்பது தெரிய வந்தது.தேர்தல் பறக்கும் படையினர் பணத்தைப் பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
*சாத்துார் வெங்கடாஜலபுரம் போலீஸ் செக்போஸ்டில் தேர்தல் நிலை யான கண்காணிப்பு புள்ளியல் குழு அலுவலர் ஜக்கம்மாள் தலைமையில் போலீசார் நேற்று மாலை 4:00 மணிக்கு வாகன சோதனை செய்தபோது திருத்தங்கலை சேர்ந்த நாகராஜன், 52. ஓட்டி வந்த காரில் ஆவணங்கள் இன்றி இருந்த ரூ 1.30 லட்சத்தை பணத்தை பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
*அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் ரோட்டில் வந்த சரக்கு வாகனத்தை பறக்கும் படை அதிகாரி தேவி தலைமையிலான அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஆவணங்கள் இன்றி வைத்திருந்த 80 ஆயிரம் பணத்தை பாலவநத்தத்தை சேர்ந்த முருகேசனிடம் பறி முதல் செய்து, அருப்புக்கோட்டை தாசில்தார் விஜயலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.
*காரியாபட்டி ஆவியூரைச் சேர்ந்தவர் முத்து 48. காரியாபட்டியில் உள்ள அவரது 6 சென்ட் இடத்தை விலை பேசி, நேற்று பத்திரப்பதிவு செய்ய தயாராகினர். இடத்தை வாங்கியவர் முத்துவிடம் ரூ. 30 லட்சத்து 30 ஆயிரத்தை கொடுத்தார். அவர் பணத்தை பெற்றுக் கொண்டு பஸ்சில் ஆவியூர் சென்றார். அங்கு சோதனையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் ஆனந்தபாபு, ரத்தினம் தலைமையிலான குழுவினர் பணத்தை பறிமுதல் செய்து, வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில் உரிய ஆவணங்களை காண்பித்தும், வருமான வரி கட்டாதது குறித்து கேள்வி எழுப்பினர். பின் தேர்தல் நடத்தை விதிமுறைகளை சுட்டிக்காட்டி திருச்சுழி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
