ADDED : ஜன 13, 2026 06:10 AM
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் குன்னுார் ஊராட்சியில் பெரும்பாலான தெருக்களில் சுகாதாரக் கேடு, சேதம் அடைந்த பயணியர் நிழற்குடை, நூலக கட்டடம், செயல்படாத பெண்கள் சுகாதார வளாகம், குறுகிய ரோட்டால் விபத்து அபாயம் என பல்வேறு சிரமங்களுடன் அப்பகுதி மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த ஊராட்சியில் குன்னுார் போக்குவரத்து நகர்,ஆண்டாள் நகர், கோவில் நகர், சப்தகிரி நகர், கிருஷ்ணா நகர், ஸ்ரீ ராம் நகர் போன்ற புதிய குடியிருப்புகள் உள்ளன. இதில் போக்குவரத்து நகர் உருவாகி பல ஆண்டுகளான நிலையில் இன்னும் பல தெருக்களில் முறையான ரோடு, வாறுகால் வசதிகள் இல்லை. பூங்கா ,பொது பயன்பாட்டு இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணன் கோவிலில் இருந்து குன்னுார் வரை நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் குறுகிய ரோட்டால் விபத்து அபாயம் உள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள பயணியர் நிழற்குடை சேதமடைந்து இடிந்து விழுந்து நிலையில் காணப்படுகிறது. நூலக கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது.
பஸ்கள் வந்து திரும்பும் மைதானத்தில் ஆக்கிரமிப்புகள், கழிவுகள், சுகாதாரக் கேடுகள் காணப்படுகிறது. பயணியர் நிழற்குடை இல்லாமல் மக்கள் வெயிலில் தவிக்கின்றனர். கே. புதூர் ரோட்டில் திறந்த நிலையில் உள்ள கிணறு அச்சத்தை ஏற்படுத்துகிறது. மெயின் ரோட்டிலும், அனைத்து தெருக்களிலும் கழிவுகள் கொட்டப்பட்டு சுகாதாரக் கேடு காணப்படுகிறது.
முனியாண்டி கோவில் ரோட்டில் உள்ள பெண்கள் சுகாதார வளாகம் செயல்படாமல் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. முனியாண்டி கோவிலில் இருந்து நான்கு வழி சாலையை இணைக்கும் வகையில் உள்ள மங்கம்மாள் ரோடு மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மயானங்கள் சேதமடைந்தும், பயன்படுத்த முடியாமலும் சுகாதாரக் கேட்டுடன் காணப் படுகிறது.
