தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சேதமடைந்த அரசு கட்டடங்கள்; சுகாதார வளாகமின்றி அவதி

சேதமடைந்த அரசு கட்டடங்கள்; சுகாதார வளாகமின்றி அவதி

சேதமடைந்த அரசு கட்டடங்கள்; சுகாதார வளாகமின்றி அவதி


UPDATED : ஆக 31, 2026 07:09 PM

ADDED : ஆக 31, 2026 07:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 31, 2026 07:09 PM ADDED : ஆக 31, 2026 07:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சி ஒன்றியம் அச்சங்குளம் ஊராட்சியில் சேதமடைந்த அரசு கட்டிடங்கள், சுகாதார வளாகம் இல்லாமல் திறந்தவெளியை பயன்படுத்தும் அவலம், சுகாதாரக் கேடு, தினமும் இரு முறை மட்டுமே பஸ் வசதி, மருத்துவ வசதி இல்லாமல் தவிப்பு என பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் அப்பகுதி மக்கள்.

அச்சங்குளம், கடம்பன்குளம், கரை வளைந்தான்பட்டி, வெள்ள குளம் ஆகிய பகுதிகளை கொண்ட இந்த ஊராட்சியில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

முன்பு சிவகாசி ரோட்டில் இருந்து கடம்பன்குளம் வழியாக அச்சங்குளத்திற்கு என தனியாக ரோடு வசதி இருந்தது. இந்நிலையில் தனி ரோடு துண்டிக்கப்பட்டு, நான்கு வழிச்சாலையை கடந்து செல்ல பாலமோ, சுரங்கப் பாதையோ இல்லாததால் எதிர் திசையில் பயணிக்கும் நிலை ஏற்பட்டு,

இப்பகுதி மக்கள் தினமும் சிரமத்தையும், விபத்து அபாயத்தையும் சந்தித்து வருகின்றனர்.

இந்த ரோடும் குறுகலாக இருப்பதால் எதிரும், புதிருமாக இரு வாகனங்கள் வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் இவ்வழியாக டூவீலரில் செல்வார்கள் விபத்தில் காயமடைந்து வருகின்றனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நிலையில் ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே அரசு டவுன் பஸ் வந்து செல்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் ஆட்டோக்களில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

கடம்பன் குளத்தில் உள்ள பாலத்தின் தடுப்பு சுவர்கள் சேதமடைந்து காணப்படுகிறது. ரோட்டோரத்தில் கழிவுகள் கொட்டப்பட்டு சுகாதாரக் கேடு காணப்படுகிறது. அச்சம் குளத்தில் ஆண்கள், பெண்களுக்கு சுகாதார வளாகம் இல்லாததால் திறந்த வெளியை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

இங்குள்ள பழைய, புதிய ஊராட்சி அலுவலகங்கள், அங்கன்வாடி, சேவை மையம், ரேஷன் கடை கட்டிடங்கள் உட்பட பல அரசு கட்டிடங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. தாமிரபரணி குடிநீர் தினமும் வழங்கப்படாததால் மக்கள் மினரல் வாட்டரை ஒரு குடம் ரூ.15 கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

* தினமும் விபத்து அபாயம்

கடம்பன்குளம், அச்சங்குளம் கிராமங்களுக்கு செல்வதற்கு தனியாக இருந்த கிராம சாலை துண்டிக்கப்பட்டு நான்கு வழிச்சாலையின் எதிர்த்திசையில் தான் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே, நான்கு வழிச்சாலையை கடந்து செல்ல வசதியாக சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும்.

- முத்துகிருஷ்ணன், குடியிருப்பாளர்.

* வழிப்பாதையாக மாற்றுங்கள்

அச்சங்குளத்தில் இருந்து கரை வளைந்தான் பட்டிக்கு செல்லும் திருவண்ணாமலை வண்டி பாதை வழியாக தினமும் மக்கள், விவசாயிகள் பயணித்து வருகின்றனர். எனவே, இதனை தார் ரோட்டு வழி பாதையாக மாற்றினால் விவசாயிகள் எளிதில் பயணிக்கலாம்.மேலும், நவீன சுகாதார வளாகங்கள் அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பிச்சை முருகன், குடியிருப்பாளர்.

* கூடுதல் பஸ் வசதி வேண்டும்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் அச்சம் குளத்திற்கு தினமும் காலை, மாலை இரு நேரங்கள் மட்டுமே ஒரே ஒரு அரசு பஸ் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதனால் ஆட்டோக்களில் கட்டணம் கொடுத்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, குறைந்தபட்சம் 2 மணி நேரத்திற்கு ஒரு டவுன் பஸ் வந்து செல்ல வேண்டும்.

- சுப்பிரமணியன், குடியிருப்பாளர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us