/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகரில் ‛'கிசான் ரேஷன் ஷாப்' பெயரில் ரூ.2.86 கோடி பருப்பு கொள்முதல் மோசடி சென்னையில் வாலிபர் கைது
/
விருதுநகரில் ‛'கிசான் ரேஷன் ஷாப்' பெயரில் ரூ.2.86 கோடி பருப்பு கொள்முதல் மோசடி சென்னையில் வாலிபர் கைது
விருதுநகரில் ‛'கிசான் ரேஷன் ஷாப்' பெயரில் ரூ.2.86 கோடி பருப்பு கொள்முதல் மோசடி சென்னையில் வாலிபர் கைது
விருதுநகரில் ‛'கிசான் ரேஷன் ஷாப்' பெயரில் ரூ.2.86 கோடி பருப்பு கொள்முதல் மோசடி சென்னையில் வாலிபர் கைது
ADDED : டிச 12, 2024 02:28 AM
விருதுநகர்:மத்திய அரசின் 'கிசான் ரேஷன் ஷாப்' பெயரில் விருதுநகர் தனலெட்சுமி டிரேடர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பருப்பு கொள்முதல் செய்து ரூ. 2.86 கோடி மோசடி செய்த வழக்கில் விழுப்புரம் விக்கிரவாண்டியைச் சேர்ந்த ஹரிஹரனை 26, சென்னையில் போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் அருகே ரோசல்பட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். மனைவி தனலட்சுமி. இவர்கள் அதே பகுதியில் தனலெட்சுமி டிரேடர்ஸ் என்ற பருப்பு மொத்த கொள்முதல் வியாபாரம் வருகின்றனர்.
இவர்களுக்கு சொந்தமாக 4 பருப்பு மில்கள் உள்ளன.
இவர்களிடம் 2021 மார்ச் 18ல் பருப்பு வியாபாரிகளான முருகேசன், ஹரிஹரன் அறிமுகமாகினர். தாங்கள் மத்திய அரசின் கீழ் செயல்படும் 'கிசான் ரேஷன் ஷாப்' நிறுவன கொள்முதல் பொறுப்பாளர்கள் எனவும், வியாபாரிகளிடம் இருந்து மானிய விலைக்கு பருப்பு கொள்முதல் செய்து, மக்களுக்கு வழங்க உள்ளதாக கூறி போலி அடையாள அட்டைகளை காட்டி நம்ப வைத்தனர்.
மேலும் கொள்முதலுக்கான பணம் இரண்டு நாட்களில் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளனர். இவர்கள் மூலம் கிசான் ரேஷன் ஷாப் சேர்மன் என கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த ஜெயகணேஷ், நிர்வாக இயக்குனர் என மதுரை கள்ளிக்குடி அருகே ஓடைப்பட்டியைச் சேர்ந்த பாண்டியராஜன் ஆகியோர் தம்பதிக்கு அறிமுகமாகினர்.
இதை நம்பிய தம்பதி 'கிசான் ரேஷன் ஷாப்' திட்டத்தில் சேர்ந்து தொழில் செய்ய விருப்பம் தெரிவித்தனர். அதன் படி 2021 மார்ச் 28ல் 50 கிலோ வீதம் 400 மூடைகளில் பாசிப்பருப்பு பொள்ளாச்சி கோடவுனுக்கும் , மார்ச் 29ல் 300 மூடைகளில் பருப்புகளை கள்ளிக்குடி கோடவுனுக்கும் அனுப்பி வைத்தனர்.
இது போன்று 2021 மார்ச் 28 முதல் ஜூன் 30 வரை ரூ. 5.01 கோடி மதிப்பிலான பருப்பு மூடைகளை அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் முறையாக பணம் வராததால் ராஜ்குமார் கேள்வி கேட்ட போது ரூ. 2.15 கோடி கொடுத்தனர். மீதமுள்ள ரூ. 2.86 கோடியை கொடுக்காமல் காலம் தாழ்த்தினர்.
ஜெயகணேஷ், பாண்டியராஜன் குறித்து விசாரித்த போது தன்னிடம் குறைந்த விலைக்கு பருப்புகளை வாங்கி மார்கெட்டில் மொத்த விலைக்கும், சில்லறையாகவும் விற்பனை செய்து மோசடி செய்தது ராஜ்குமாருக்கு தெரிந்தது. இப்புகார் தொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர்.
சென்னையில் நடந்த மற்றொரு மோசடி வழக்கில் கைதான ஜெயகணேஷ், பாண்டியராஜன் இவ்வழக்கிலும் கைது செய்யப்பட்டனர். இதில் முருகேசன் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியைச் சேர்ந்த ஹரிஹரனை சென்னை பெருங்களத்துாரில் போலீசார் கைது செய்தனர்.

