மதிய உணவு திட்டம் கொண்டு வந்தது யார்? : காங்., - அ.தி.மு.க., இடையே சர்ச்சை
மதிய உணவு திட்டம் கொண்டு வந்தது யார்? : காங்., - அ.தி.மு.க., இடையே சர்ச்சை
UPDATED : ஏப் 11, 2012 11:23 PM
ADDED : ஏப் 11, 2012 11:00 PM

சென்னை: மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தது யார் என்பதில் ஆளுங்கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், சட்டசபையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சட்டசபையில் சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், தே.மு.தி.க., எம்.எல்.ஏ., தமிழழகன் பேசும்போது, மதிய உணவுத் திட்டத்தை, முதன் முதலில் காமராஜர் கொண்டு வந்தார் என்றதும், சமூகநலத் துறை அமைச்சர் வளர்மதி குறுக்கிட்டு, ''காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தபோது, அது தனியார் திட்டமாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட பகுதியில், சில பள்ளிகளில் மட்டும் தனியார் ஒத்துழைப்புடன் நடந்தது. அவருக்கு முன்பே, நீதிக்கட்சி சார்பில், சென்னை மாகாணத்தில் ஒரு சில இடங்களில் மதிய உணவு, தனியார் உதவியுடன் வழங்கப்பட்டது. ஆனால், எம்.ஜி.ஆர்., தான் சத்துணவுத் திட்டத்தை அரசு திட்டமாக கொண்டு வந்தார்,'' என்றார். அமைச்சரின் பதிலை ஏற்காமல், காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆளுங்கட்சியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் உறுப்பினர் ரங்கராஜன் பேசும்போது, ''காமராஜர் ஆட்சியை விட்டு இறங்கும்போது, தமிழகத்தில் 21 ஆயிரம் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்பட்டது,'' என்றார். இதற்கு அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, செங்கோட்டையன், வளர்மதி ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்துப் பேசினர்.
இதில், காங்கிரசுக்கும் ஆளுங்கட்சியினருக்கும் இடையே சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின், இதற்கு சபைக் குறிப்பு புத்தகத்தைக் காட்டி விளக்கமளித்த சபாநாயகர் ஜெயகுமார், ''இதுபோன்ற பிரச்னை இதே சபையில் ஏற்கனவே விவாதத்திற்கு வந்துள்ளது. அப்போது, முதல்வர் ஜெயலலிதா, 'காமராஜர் ஒரு சில பள்ளிகளில் மட்டுமே மதிய உணவு வழங்கினார். 82ம் ஆண்டு எம்.ஜி.ஆர்., தான் முழுமையான மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். அப்போது காங்கிரசார் கிண்டலும், கேலியும் செய்தனர். கருணாநிதி, பள்ளிக் குழந்தைகளை தட்டேந்தி பிச்சை எடுக்க வைக்கிறார்கள் என்று கேலி செய்தார். ஆனால், எம்.ஜி.ஆர்., அரசிடம் நிதி இல்லாவிட்டால், நான் மக்களிடம் பிச்சை எடுத்தாவது, இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவேன் என்று கூறினார். இந்தத் திட்டம் நாட்டுக்குத் தேவையான திட்டம் என்று, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இத்திட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் செயல்படுத்த வேண்டும் என்று, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம்.ஜி.ஆர்., கொண்டு வந்த இந்தத் திட்டத்திற்கு ஈடு இணையில்லை' என்று பதிலளித்துள்ளார். எனவே, ஏற்கனவே விவாதித்து முடிந்துவிட்ட இப்பிரச்னை இப்போது தேவையில்லை,'' என்று கூறி, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
