தெரசா பல்கலை தொலைநிலை கல்வியில் ஆய்வுப் படிப்பு ரத்து: பட்டம் பெற தவிக்கும் மாணவிகள்
தெரசா பல்கலை தொலைநிலை கல்வியில் ஆய்வுப் படிப்பு ரத்து: பட்டம் பெற தவிக்கும் மாணவிகள்
ADDED : செப் 06, 2011 11:57 PM

மதுரை: கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை தொலைநிலை கல்வியில், ஆய்வுப் படிப்புக்கான இடையூறு களையப்பட வேண்டும், என மாணவிகள் விரும்புகின்றனர்.
பெண்களின் உயர்கல்விக்காக கொடைக்கானலில் அன்னை தெரசா பல்கலை துவங்கப்பட்டது. இங்கு தொலை நிலை கல்வியில் எம்.பில்., பி.எச்டி., வகுப்புகள் துவக்கப்பட்டன. இதில் சேர வெளிநாட்டு மாணவிகளும் ஆர்வம் காட்டினர். ஆனால், அரசு கொள்கை முடிவு எனக்கூறி, திடீரென தொலை நிலைக் கல்வி திட்டத்தின் ஆய்வுப் படிப்பை ரத்து செய்து விட்டது. இந்நிலையில், ஏற்கனவே ஆய்வுக்கு பதிவு செய்தவர்களுக்கு, ஆய்வை சமர்ப்பிக்க வாய்ப்பு தரப்பட்டது. இருந்தாலும் பல மாணவிகளை, அதன்பின் நடைபெறும் வாய்மொழித் தேர்வுக்கு அழைக்கவில்லை. இதனால், மாணவிகள் வேதனையில் உள்ளனர். இதுதவிர, முனைவர் பட்டம் பெறுவோரின் கட்டுரைகளை வெளிநாட்டு பல்கலை தேர்வாளர் ஒருவர் உட்பட 3 பேர் மதிப்பீடு செய்வது வழக்கம். இத்தேர்வாளர் நியமனத்தை அனைத்து பல்கலைகளும் ரத்து செய்துவிட்டன. ஆனால், இப்பல்கலையில் இன்னும் அது தொடர்வது வேடிக்கையாக உள்ளது. இப்பல்கலையில் கடந்த 4 மாதங்களாக துணைவேந்தர் இல்லை. கன்வீனர் கமிட்டியே பல்கலை நிர்வாகத்தை கவனிக்கிறது. விரைவாக துணைவேந்தரை நியமிக்க வேண்டும். தொலைநிலை கல்வியில் ஆய்வுப் படிப்பில் உள்ள தடைகளை களைய, முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகளும், ஆசிரியர்களும் விரும்புகின்றனர்.