சிக்-குன்-குனியா நோயாளி போல சுகாதாரத்துறை முடங்கிக் கிடந்தது* அமைச்சர் விஜய் குற்றச்சாட்டு
சிக்-குன்-குனியா நோயாளி போல சுகாதாரத்துறை முடங்கிக் கிடந்தது* அமைச்சர் விஜய் குற்றச்சாட்டு
ADDED : செப் 14, 2011 01:17 AM
சென்னை:''கடந்த ஆட்சியில், சுகாதாரத்துறை, சிக்-குன்-குனியாவால் பாதிக்கப்பட்ட நோயாளியைப் போல முடங்கிக் கிடந்தது,'' என, சட்டசபையில் அமைச்சர் விஜய் குற்றம் சாட்டினார்.
சுகாதாரத்துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதங்களுக்கு அமைச்சர் விஜய் பதிலளித்து பேசியதாவது:மக்கள் நல்வாழ்வில் என்றும் அக்கறை காட்டும் முதல்வர் ஜெயலலிதா, நிதிப்பற்றாக்குறை நிலவும் சூழ்நிலையிலும், மக்கள் நலன் கருதி இந்த ஆண்டு மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு, 4,761 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். இது, கடந்த ஆண்டை விட, 811 கோடி ரூபாய் கூடுதல்.கடந்த தி.மு.க.,வின் இருண்ட ஆட்சியில், மக்கள், சிக்-குன்-குனியா போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டனர். மக்கள் மட்டுமல்லாமல், சுகாதாரத் துறையும், சிக்-குன்-குனியாவால் பாதிக்கப்பட்ட நோயாளியைப் போல முடங்கிக் கிடந்தது.முந்தைய அரசின் அலட்சியப் போக்கு மற்றும் அக்கறையின்மையால், மக்களுக்கு நேரடியாக சேவை செய்ய வேண்டிய மிக அவசியமான பல பணியிடங்கள், அரசு மருத்துவமனைகளில் நிரப்பப்படவில்லை. எப்போதும் நூற்றுக்கணக்கில் டாக்டர் பணியிடங்கள் காலியாகவே இருந்து வந்தன.எலிக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் போன்ற பலவிதமான தொற்று நோய்களால் மக்கள் அவதிப்பட்டனர். தடுப்பூசித் திட்டம் கூட தடுமாறிப் போனது. கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்க வேண்டிய பேறுகால நிதியுதவி உடனுக்குடன் வழங்கப்படாமல், பிறந்த குழந்தை தாயுடன் நடந்து வந்து நிதியுதவியை பெற வேண்டிய அளவில் காலதாமதமாக வழங்கப்பட்டது.சேலம், மதுரை போன்ற இடங்களில் கட்டி முடிக்கப்படாத மருத்துவமனைகளை முழுமையான மருத்துவமனைகள் போன்ற திறப்பு விழா செய்த மாயங்கள் பல நடந்தன. கடந்த தி.மு.க., ஆட்சியில் எவ்விதமான அடிப்படை கட்டமைப்பு பணிகளையும் மேற்கொள்ளாமல், மனம்போன போக்கில் தேர்தலை மட்டுமே மனதில் வைத்து, மக்களை ஏமாற்றிய வெற்று அறிவிப்புகளில் ஒன்று தான் புதிய மருத்துவக் கல்லூரிகள்.முதல்வர் ஜெயலலிதா இதை ஆய்வு செய்து, மருத்துவப் பேராசிரியர்கள் மற்றும் கட்டட வசதிகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு, ஆண்டுக்கொரு புதிய மருத்துவக் கல்லூரி என்ற நடைமுறை சாத்தியமான கொள்கையை வகுத்துள்ளார்.இவ்வாறு அமைச்சர் விஜய் தெரிவித்தார்.