தி.மு.க., மகளிர் அணி பிரமுகர் கொலை வழக்கு: ஸ்டாலினுக்கு தொடர்பில்லை என கணவர் மனு
தி.மு.க., மகளிர் அணி பிரமுகர் கொலை வழக்கு: ஸ்டாலினுக்கு தொடர்பில்லை என கணவர் மனு
ADDED : செப் 23, 2011 11:03 PM
சென்னை: 'என் மனைவி கொலை செய்யப்பட்டதில், முன்னாள் துணை முதல்வர் மற்றும் அவரது தனி உதவியாளருக்கு தொடர்பில்லை.
ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களின் வற்புறுத்தலினால், பொய் புகார் கொடுத்தேன்' என, சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க., பெண் பிரமுகரின் கணவர் மனு தாக்கல் செய்துள்ளார். விசாரணை எட்டு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சென்னை கே.கே., நகரைச் சேர்ந்த குமாரவேல் என்பவர் தாக்கல் செய்த மனு: என் மனைவி பால்மலர், தி.மு.க., மகளிர் அணியில் கே.கே., நகர் பகுதி அமைப்பாளராக பணியாற்றினார். எனது குடும்பத்தினருடன், 2008ம் ஆண்டு ஜூன் மாதம் மதுரைக்கு சென்றிருந்தேன். சென்னையில் இருந்து என் மனைவிக்கு தொலைபேசி மூலம் தகவல் வந்தது. கட்சித் தலைவர் பிறந்த நாளுக்கு சென்னையில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அவரை சென்னைக்கு அனுப்பி வைத்தேன். மதுரையில் இருந்து சென்னைக்கு ஜூன் 6ம் தேதி வந்தேன். என் வீடு பூட்டப்பட்டிருந்தது. அருகில் உள்ளவர்களிடம் விசாரித்தேன். 3ம் தேதிக்குப் பின், என் மனைவியை பார்க்கவில்லை என தெரிவித்தனர். பகுதிச் செயலர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார் என்கிற தகவல் தான் எனக்கு கிடைத்தது. மணிமங்கலம் ஏரியில் சாக்கு பையில் பெண்ணின் பிணம் கிடப்பதை, பத்திரிகைகளில் பார்த்தேன். சந்தேகப்பட்டு போலீஸ் அதிகாரிகளிடம் விசாரித்தேன். மருத்துவமனைக்கு சென்றேன். என் மனைவியின் உடல் தான் என தெரிய வந்தது. கழுத்து நெரிக்கப்பட்டதால் இறந்ததாக, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கை காஞ்சிபுரம் சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, ஐகோர்ட் உத்தரவிட்டது. 2009ம் ஆண்டு ஜனவரியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இறுதி அறிக்கையை விரைந்து தாக்கல் செய்ய உத்தரவிட்டும், புலனாய்வில் எந்த முன்னேற்றமும் இல்லை. சட்டசபை தேர்தல் முடிந்து, புதிய அரசு பதவியேற்றுள்ளது. ஆளும் கட்சியைச் சேர்ந்த இரண்டு பிரமுகர்கள் என்னை அழைத்து, முன்னாள் துணை முதல்வர் மற்றும் அவரது தனி உதவியாளரை தொடர்புபடுத்தி கூடுதல் புகாரை கொடுக்குமாறு வற்புறுத்தினர். வேறு வழியில்லாமல், இந்தக் கொலை பற்றி அவர்களுக்கு தெரியும் என கூடுதல் புகார் கொடுத்தேன். இந்தப் புகார், பத்திரிகைகளில் வெளிவந்தது. சிலரின் நிர்பந்தத்தினால் இந்த கூடுதல் புகார் அளிக்கப்பட்டது. என் மனைவி கொலையில், முன்னாள் துணை முதல்வர் மற்றும் அவரது தனி உதவியாளருக்கு எந்த தொடர்பும் கிடையாது என எனக்கு தெரியும். தவிர்க்க முடியாத சூழ்நிலையால், கூடுதல் புகாரில் பொய்யான தகவலை குறிப்பிட்டேன். ஐகோர்ட்டில் 2008ம் ஆண்டில் மனு தாக்கல் செய்யும் போது கூட, இந்த இருவரையும் பற்றி நான் எதுவும் கூறவில்லை.
ஆளும் கட்சியின் அரசியல் விரோதம் காரணமாக, நான் பலிகடா ஆக்கப்பட்டேன். கூடுதல் புகாரில் கூறிய அந்த இரண்டு பெயர்களையும் நீக்குமாறு போலீசாரிடம் கேட்டேன். அவர்கள் மறுத்து விட்டனர். 2008ம் ஆண்டு போலீசாரிடம் நான் அளித்த வாக்குமூலம் தான் உண்மையானது. இரண்டாவதாக அளித்த கூடுதல் புகாரில் உண்மையில்லை. எனவே, பழைய புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, நீதிபதி சுதந்திரம் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையை எட்டு வாரங்களுக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.