கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் அவசியம் : பாரம்பரியமாக யானைகளை பராமரிப்பவர் கருத்து
கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் அவசியம் : பாரம்பரியமாக யானைகளை பராமரிப்பவர் கருத்து
ADDED : ஜூலை 27, 2011 09:52 PM
சென்னை : 'யானைகளின் உடல் நலனை கருத்தில் கொண்டு, யானைகள் புத்துணர்வு முகாம் திட்டத்தை மீண்டும் துவக்க வேண்டும்' என, பாரம்பரியமாக யானைகளை பராமரித்து வரும் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டுகளில் கோவில்களில் பராமரிக்கப்பட்டு வந்த யானைகள் சில மதம் பிடித்து, அட்டகாசம் செய்தன. சில கோவில்களில் மதம் பிடித்த யானைகளால், பாகன்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். கடந்த 2003ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா, இச்சம்பவம் குறித்து ஆய்வு நடத்துமாறு உத்தரவிட்டார். இதில், போதிய ஓய்வு இல்லாததாலும், உணவு பற்றாக்குறையாலும், மன அழுத்தம் ஏற்பட்டு, யானைகளுக்கு மதம் பிடிக்கின்றன என்று தெரியவந்தது.
இதையடுத்து, கோவில்கள் மற்றும் தனியாரால் பராமரிக்கப்படும் யானைகளுக்கு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை சரணாலயத்தில், புத்துணர்வு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த 2003ம் ஆண்டு, தமிழகத்தில் உள்ள கோவில்கள், மடங்கள் மற்றும் தனியாரிடம் இருந்த 100 யானைகள், லாரிகள் மூலம் முதுமலைக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு, அவற்றுக்கு மருத்துவ சிகிச்சை, சத்துணவு, உடற்பயிற்சி , புத்துணர்வு சிகிச்சை ஆகியவை வழங்கப்பட்டன. யானைகள் அங்குள்ள நதியில் தினசரி குளிப்பாட்டப்பட்டன. கால்நடை மருத்துவர்கள், வன விலங்கு பாதுகாவலர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்துரையாடி, கோவில்களில் வளர்க்கப்படும் யானைகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தனர். இதன் காரணமாக, முகாமில் கலந்து கொண்ட யானைகள், உடல் மற்றும் உ ளரீதியாக உற்சாகமடைந்தன. மன அழுத்தம் குறைந்து, வாழும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு, யானைகள் தங்களை மாற்றிக் கொள்வதற்கு, இந்த புத்துணர்வு முகாம் பெரிதும் உதவியது.
கடந்த 2006ம் ஆண்டு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், யானைகள் புத்துணர்வு முகாம் திட்டம் முடக்கப்பட்டது. தற்போது, இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த, இந்துசமய அறிநிலையத் துறை தீவிரம் காட்டி வருகிறது. இத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், 45 யானைகள் உள்ளன. இவற்றை புத்துணர்வு முகாமிற்கு அனுப்பி, பராமரிக்க வேண்டும் என, பாரம்பரியமாக யானைகளை பராமரித்து வரும் பீர்முகம்மது கூறியுள்ளார்.
தென்காசியைச் சேர்ந்த பீர் முகம்மது கூறியதாவது: யானைகளில் பல பிரிவு உண்டு. கோவில்களில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகள், மற்ற யானைகளை பார்த்து, உற்சாகம் அடைவதற்கு வாய்ப்பில்லை. ஒரு சில கோவில் யானைகள், 50 ஆண்டுகள் வரைக்கும் கூட, தனது இனத்தை பார்க்க வாய்ப்பில்லாமல், தனிமையில் இருந்துள்ளன. புத்துணர்வு முகாம் நடத்தினால் மட்டுமே, யானைகள் ஒன்றோடு ஒன்று சந்தித்து, நட்பை பரிமாறிக் கொள்ளும். மேலும், நதிகளில் நீராடுவதும், லேகியம் சாப்பிடுவதும் அவற்றை புத்துணர்ச்சி பெற வைக்கும். முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியின் பேரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முதுமலையில் யானைகள் புத்துணர்ச்சி முகாம் நடந்தது. இது நல்ல பயன் அளித்தது. யானைகளை லாரியில் ஏற்றுவதால் அவை அவஸ்தைபடுகின்றன என்று கருத்து கூறப்பட்டது. ஆனால், அது தவறானது. யானைகள் பலம் கொண்டவை. லாரிகளில் ஏற்றிச் செல்வதால், அவற்றிற்கு எந்த பாதிப்பும் வராது. புத்துணர்வு பயிற்சி முகாம் இடையில் நிறுத்தப்பட்டதால், யானைகள் சோர்வடைந்துள்ளன. எனவே, முதல்வர் ஜெயலலிதா மீண்டும் யானைகள் புத்துணர்ச்சி முகாமை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு பீர் முகம்மது கூறினார்.