சபலத்தால் காரை இழந்த டிராவல்ஸ் அதிபர்:விபசார தடுப்பு போலீசாக நடித்த மூவர் கைது
சபலத்தால் காரை இழந்த டிராவல்ஸ் அதிபர்:விபசார தடுப்பு போலீசாக நடித்த மூவர் கைது
ADDED : செப் 15, 2011 11:11 PM

சென்னை:விபசார தடுப்புப் பிரிவு போலீஸ் போல் நடித்து, திருவையாறைச் சேர்ந்தவரை ஏமாற்றி, கார் மற்றும் லேப்-டாப்பை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் கைது செய்தனர்.திருவையாறைச் சேர்ந்தவர் குருநாதன்; டிராவல்ஸ் நடத்தி வருகிறார்.
கடந்த 8ம் தேதி, சென்னை வந்த இவரை, இவரது நண்பரான சினிமா நிறுவன மேலாளர் ரமேஷ் தொடர்பு கொண்டு, தன்னிடம் பெண்கள் இருப்பதாக ஆசை காட்டி, எழும்பூர் பாந்தியன் சாலை, வேனல் சாலை சந்திப்பிற்கு காருடன் வரவழைத்தார். ரமேசை நம்பி குருநாதன் அப்பகுதிக்கு வந்துள்ளார். அப்போது, நான்கு பேர் அங்கு வந்தனர்.
விபசார தடுப்பு பிரிவு போலீசார் என தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர்கள், காருடன் துரை, குருநாதன் ஆகியோரை அழைத்துச் சென்று, மிரட்டி லேப்-டாப், கார் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு, புளியந்தோப்பு நடராஜ் தியேட்டர் அருகில், குருநாதனை இறக்கிவிட்டுச் சென்றனர். இதுகுறித்து, எழும்பூர் போலீசில் குருநாதன் புகார் அளித்தார். சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன் உத்தரவுப்படி, இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர் பாஸ்கரன் மேற்பார்வையில், தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணையில், குருநாதனை, பெண் ஆசை காட்டி அழைத்த ரமேஷ், விபசார தொழில் செய்து வந்துள்ளார். அப்போது, குருநாதன் அறிமுகமாகியுள்ளார். கையில் பணப்புழக்கம் குறைந்ததால், குருநாதனை மிரட்டிப் பணம் பறிக்க ஆசைப்பட்டுள்ளார்.
சம்பவத்தன்று, தன்னிடம் பெண் இருப்பதாகவும், காருடன் வந்தால் உல்லாசம் அனுபவிக்கலாம் என்றும், குருநாதனிடம் ஆசை காட்டியுள்ளார். குருநாதன் அங்கு சென்ற போது, தன் நண்பர்களான சினிமா துணை நடிகர்கள் மகேந்திரன், பாபு, தயாளன் ஆகியோரை, விபசார தடுப்புப் பிரிவு போலீசார் போல் நடிக்கச் செய்து, குருநாதனை கைது செய்வது போல் பாவலா செய்து, காரில் ஏற்றி அழைத்துச் சென்று மிரட்டியுள்ளனர். அப்போது, குருநாதனிடம் இருந்து, ஏ.டி.எம்., கார்டை பறித்து, அதில் இருந்து 15 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துள்ளனர்.
புளியந்தோப்பு அழைத்துச் சென்று, நடராஜ் தியேட்டர் பகுதியில், கார் மற்றும் லேப்-டாப் ஆகியவற்றை பறித்துக் கொண்டு மிரட்டி, குருநாதனை இறக்கிவிட்டுச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து, புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியைச் சேர்ந்த ரமேஷ்,32, சென்னை, புளியந்தோப்பைச் சேர்ந்த மகேந்திரன்,35, மற்றும் பாபு,29, ஆகிய மூவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார், லேப்-டாப், ஆகியவை கைப்பற்றப்பட்டன. இதில், மூளையாகச் செயல்பட்ட தயாளன் தலைமறைவாகிவிட்டார்.