கள்ளக்காதலால் கிரைண்டர் கல்லால் தாக்கி கணவரை கொலை செய்த கொடூர மனைவி
கள்ளக்காதலால் கிரைண்டர் கல்லால் தாக்கி கணவரை கொலை செய்த கொடூர மனைவி
ADDED : ஆக 01, 2011 11:52 PM
சிவகாசி: கள்ளக்காதல் மோகத்தால், கணவரை கிரைண்டர் கல்லால் தாக்கி கொலை செய்த, மனைவி உட்பட மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி விஸ்வநத்தம் பழைய மீன் மார்க்கெட் பகுதியில் கருணை மகாராஜன் என்பவரது கிணற்றில், கால்கள் கட்டப்பட்டு, தலை சிதைந்த நிலையில், 45 வயதுள்ள ஆண் உடல் மிதந்தது.
இதை, டவுன் போலீசார் மீட்டு விசாரித்தனர். விஸ்வநத்தம் விநாயகர் காலனியைச் சேர்ந்த வீரசிங்கம் வீடு, சில நாட்களாக பூட்டி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த வீட்டின் கதவை போலீசார் உடைத்து பார்த்தபோது, ரத்தக்கறை மற்றும் கொலை நடந்ததற்கான அடையாளங்கள் இருந்தன. போலீசார் நடத்திய விசாரணையில், 'சென்னை ஓட்டலில் வேலை செய்யும் வீரசிங்கம் மனைவியான சந்தனமாரி, 32, அங்குள்ள காலண்டர் கம்பெனியில் வேலை செய்துள்ளார். வீரசிங்கம் விடுமுறையில் வீட்டிற்கு வந்து செல்வார். சந்தனமாரிக்கும் அருகில் வசித்த அச்சு தொழிலாளி லட்சுமணன்,32,க்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை அறிந்த வீரசிங்கம், மனைவியுடன் தகராறு செய்தார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்ய சந்தனமாரி திட்டமிட்டார் .
அதன்படி, ஜூலை 25ல் குடிபோதையில் தூங்கி கொண்டிருந்த கணவரின் தலையில் சந்தனமாரி கிரைண்டர் கல்லை தூக்கி போட்டுள்ளார். இதற்கு கள்ளக்காதலனும் துணையாக இருந்துள்ளார். இறந்த கணவரின் கால்களை கிரைண்டர் கல் சங்கிலி, நைலான் கயிற்றால் கட்டி, உடலை சாக்குமூட்டைக்குள் வைத்துள்ளனர். பின்னர், லட்சுமணன் தம்பி கணேச பாண்டியன்,30, என்பவரை தள்ளுவண்டியுடன் வரவழைத்துள்ளனர். இரவில் வீட்டை காலி செய்வது போல், மூட்டை முடிச்சுகளுடன் கணவரின் உடலையும் தள்ளுவண்டியில் வைத்து, ஆள் நடமாட்டம் இல்லாத கிணற்றில் கொண்டு போய் வீசினர். உடல் வெளியே வராதபடி, கால்களில் கிரைண்டர் கல்லையும் சேர்த்து கட்டியது' தெரிந்தது. இதைத் தொடர்ந்து சென்னைக்கு தப்ப முயன்ற சந்தனமாரி, லட்சுமணன் மற்றும் உடந்தையாக இருந்த கணேச பாண்டியனை, போலீசார் கைது செய்தனர். சந்தனமாரி, வீரசிங்கம் தம்பதிக்கு இரண்டு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஒருவருக்கு திருமணம் முடிந்துள்ளது.

