மூடநம்பிக்கைகளை ஏற்க முடியாது: பத்மநாப சுவாமி கோவில் வழக்கில் சுப்ரீம் கோர்ட்
மூடநம்பிக்கைகளை ஏற்க முடியாது: பத்மநாப சுவாமி கோவில் வழக்கில் சுப்ரீம் கோர்ட்
ADDED : செப் 16, 2011 11:19 PM

புதுடில்லி: 'பத்மநாப சுவாமி கோவிலில் பல ஆண்டுகளாக இருந்து வரும் பாரம்பரியம், பழக்க வழக்கங்கள் பாதுகாக்கப்படும்.
பக்தர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்கப்படும். ஆனால், அதற்காக மூட நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது' என, சுப்ரீம் கோர்ட் டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன் மற்றும் ஏ.கே.பட்நாயக் ஆகியோர் தெரிவித்தனர்.
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளில் பல நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வரும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய, ஐவர் குழுவை ஜூலை மாதம் 21ம் தேதி சுப்ரீம் கோர்ட் நியமித்து உத்தரவிட்டது. இக்குழுவிற்கு தேசிய அருங்காட்சியக துணைவேந்தர் டாக்டர் சி.வி.ஆனந்தபோஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழு கோவிலின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து, தனது இடைக்கால அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அவ்வறிக்கையை ஆய்வு செய்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன் மற்றும் ஏ.கே.பட்நாயக் ஆகியோர் கோவிலின் பாதுகாப்பு குறித்து, சுப்ரீம் கோர்ட், மாநில அரசிடம் பல்வேறு விளக்கங்களை கோரியிருந்தனர். இதற்கு கேரள அரசு சார்பில் தாக்கல் செய்த நான்கு பக்க பதில் மனுவில், 'பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷங்களை பாதுகாக்கும் பணிக்கு, மாநில அரசின் போலீசார் சேவை போதுமானது. மத்திய அரசின், சி.ஆர்.பி.எப்., அல்லது மத்திய ஏஜன்சிகளின் சேவையோ தேவையில்லை. கோவிலுக்குத் தேவையான அனைத்து நிதி மற்றும் பாதுகாப்பு உதவிகளை வழங்க, மாநில அரசு தயாராக உள்ளது' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
விசாரணையின் இடையே நீதிபதிகள் கூறுகையில், 'பத்மநாப சுவாமி கோவிலில் பல ஆண்டுகளாக கடைபிடித்து வரும் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் தற்போதுள்ள நிலையிலேயே பாதுகாக்கப்படும். பக்தர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்கப்படும். ஆனால், அதற்காக மூட நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது' என்றனர். மேலும், 'கோவில் பாதாள அறைகளில் இதுவரை திறக்கப்படாமல் உள்ள 'பி' அறையை திறக்காமல் எவ்வாறு போதுமான பாதுகாப்பு அளிக்க முடியும். கோவில் சொத்துகளுக்கு ஏதாவது பாதகம் ஏற்பட்டால், அதற்கு ராஜ குடும்பத்தினர் முழு பொறுப்பேற்பார்களா?' என்று கேள்வி எழுப்பினர். ஐவர் குழு தாக்கல் செய்த இடைக்கால அறிக்கை மீதான தீர்ப்பை, வரும் 21ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.