கடலூர் சிறையில் ஆயுள் கைதி கொலை: சிறைத் துறை டி.ஐ.ஜி., விசாரணை
கடலூர் சிறையில் ஆயுள் கைதி கொலை: சிறைத் துறை டி.ஐ.ஜி., விசாரணை
ADDED : செப் 24, 2011 12:03 AM
கடலூர்: கடலூர் மத்திய சிறையில், ஆயுள் கைதி அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, சிறைத் துறை டி.ஐ.ஜி., விசாரணை மேற்கொண்டார்.
விழுப்புரத்தைச் சேர்ந்தவர் கந்தவேல்,34.
இவர், பண்ருட்டியில் நடந்த கொலை வழக்கிலும், சென்னை, பரங்கிமலையைச் சேர்ந்த அய்யனார்,31, திருவெண்ணெய்நல்லூரில் நடந்த கொலை வழக்கிலும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தனர். மனநிலை பாதிக்கப்பட்ட இவர்கள், ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 21ம் தேதி இரவு, இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. அதில், அய்யனார் தட்டால் தாக்கி, கந்தவேலை கொலை செய்தார். கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், திருச்சி மண்டல சிறைத் துறை டி.ஐ.ஜி., துரைராஜ், நேற்று முன்தினம் இரவு, கடலூர் மத்திய சிறையில் விசாரணை மேற்கொண்டார். அப்போது, சம்பவம் குறித்து, கைதிகள் மற்றும் சிறை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். கொலை சம்பவம் தொடர்பாக, மாஜிஸ்திரேட் சுகந்தி, இரண்டாம் நாளாக நேற்று காலை மீண்டும் சிறைக்குச் சென்று, கைதிகள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். அப்போது, சிறை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம், ஜெயிலர் அன்சர் பாஷா உடனிருந்தனர்.