போலீஸ் அனுமதியின்றி சினிமா ஷூட்டிங் : தயாரிப்பாளர், இயக்குனர் மீது வழக்கு
போலீஸ் அனுமதியின்றி சினிமா ஷூட்டிங் : தயாரிப்பாளர், இயக்குனர் மீது வழக்கு
ADDED : அக் 14, 2011 12:50 AM
நந்தம்பாக்கம் : போலீஸ் அனுமதியின்றி, சினிமா ஷூட்டிங்கை நடத்திய டைரக்டர், தயாரிப்பாளர் மற்றும் சினிமா படக் குழுவினரை, போலீசார் தேடி வருகின்றனர்.
நந்தம்பாக்கம், பர்மா காலனியில், முனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் முன், நேற்று முன்தினம், 'மாயவரம்' என்ற சினிமா படத்தின் ஷூட்டிங்கை அப்படக்குழுவினர் ஏற்பாடு செய்தனர்.
இதையறிந்த நந்தம்பாக்கம் போலீசார், தேர்தல் சமயத்தில், போலீஸ் உயரதிகாரி அனுமதி பெற்று, ஷூட்டிங் நடத்தும்படி கேட்டுக் கொண்டனர்.
ஆனால், கோவில் முன், 30க்கும் மேற்பட்ட நடனப் பெண்களுடன் விடிய விடிய 3 மணி வரை, சினிமா இயக்குனர் ராஜேந்திரன், ஷூட்டிங்கை நடத்தினார். இதனால், அப்பகுதி மக்கள், இரவில் தூக்கமின்றி தவித்தனர். இது குறித்து, நந்தம்பாக்கம் பர்மா காலனியை சேர்ந்த சுப்புலட்சுமி, சினிமா படக்குழுவினர் மீது புகார் அளித்தார்.
நந்தம்பாக்கம் போலீசார், போலீஸ் அனுமதியின்றி, ஷூட்டிங்கை நடத்திய சினிமா இயக்குனர் ராஜேந்திரன், தயாரிப்பு மேலாளர் மூர்த்தி மற்றும் படக் குழுவினர் மீது, பல்வேறு பிரிவுகளில், வழக்கு பதிவு செய்து, தேடி வருகின்றனர்.

