பச்சை நிறமாக மாறுகிறது காவிரி அரசின் உடனடி கவனம் தேவை
பச்சை நிறமாக மாறுகிறது காவிரி அரசின் உடனடி கவனம் தேவை
ADDED : ஆக 07, 2011 01:00 AM

தர்மபுரி : கர்நாடக மாநிலத்தில் தேக்கி வைக்கப்படும் ரசாயனக் கழிவுகள் காவிரியில் கலக்கப்படுவதால், காவிரி நீர் மாசுபட்டு, பச்சை நிறத்தில் மாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கர்நாடக மாநிலம் குடகுமலையில், தலைக்காவிரி என்ற இடத்தில் கருக் கொண்டு தமிழகத்தை நோக்கி நடை பயில்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் உருவாகி வரும் ஹேமாவதி, ஹேரங்கி, லட்சுமண தீர்த்தம், கபினி, சுவர்ணவதி போன்ற துணை நதிகள், கர்நாடகாவில் காவிரியில் கலக்கின்றன.
தமிழகத்தில் பவானி, நொய்யல், அமராவதி ஆகிய துணை நதிகள் காவிரியில் கலக்கின்றன.
கர்நாடக மாநில காவிரி ஆற்றில், ரசாயன நச்சுக் கலவைகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதாகவும், கடந்த சில ஆண்டுகளாய், காவிரி நீர், பச்சை நிறமாக மாறிவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காவிரியில் வெள்ளப் பெருக்கு காலங்களில் எல்லாம் ஒகேனக்கலில் செம்மண் கலந்த நீர் பெருக்கெடுத்து ஓடி வரும். மற்ற நேரங்களில் பச்சை நிறத்தில் நீர் ஓடி வருவதும், மேட்டூர் அணையில் தேங்கியுள்ள நீர் பச்சை நிறத்தில் இருப்பதையும் காண முடியும். ரசாயனக் கழிவுகள் கலப்பதால், காவிரி நீர் மாசுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தபோதும், இந்த விஷயத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது: காவிரி நீரின் தேவை அதிகரித்துள்ளது. வேளாண் தேவையைப் போல் தற்போது ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் சில ஆண்டுகளில் இத்திட்டம் மூலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு, குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட உள்ளது. காவிரி நீர் பச்சை நிறமாக மாறி வருவதால், தர ஆய்வு செய்ய வேண்டும். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் ஒரு பகுதியாக இதை சேர்த்து, நீர் தரத்தை உறுதி செய்ய, அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

