இலவச திட்டத்திற்கு அரசியல் தலையீடின்றி பயனாளிகள் தேர்வு: அரசு உத்தரவு
இலவச திட்டத்திற்கு அரசியல் தலையீடின்றி பயனாளிகள் தேர்வு: அரசு உத்தரவு
ADDED : செப் 06, 2011 11:48 PM

சிவகங்கை: அரசியல் தலையீடின்றி இலவச திட்டங்களுக்கு பயனாளிகளை தேர்வு செய்யுமாறு, அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
அண்ணாத்துரை பிறந்த நாளான, செப்., 15ல் பச்சை நிற ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்பத்தினருக்கு, இலவசமாக மிக்சி, கிரைண்டர், மின்விசிறி மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு ஆடு, மாடு வழங்கும் திட்டத்தை அரசு துவக்க உள்ளது.
இதில், முதற்கட்டமாக 20 லட்சம் பயனாளிகளுக்கு மிக்சி, கிரைண்டர், மின் விசிறியும், ஒரு லட்சம் குடும்பங்களுக்கு ஆடு, மாடும் வழங்கப்பட உள்ளது. இதற்கான பயனாளிகள் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. சென்னையில் முதல்வர் ஜெ., துவக்கும் இத்திட்டத்தை துவக்கும் அதே நேரத்தில், மற்ற மாவட்டங்களில் அமைச்சர்கள் துவக்கி வைக்கின்றனர்.
மிக்சி, கிரைண்டருக்கான பயனாளிகள் பட்டியல் மாவட்ட வழங்கல் அலுவலகம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆடு, மாடு பெறும் பயனாளிகள் கிராம சபை மூலம் பரிந்துரை செய்யப்பட்டு, அதிகாரிகள் தேர்வு செய்வர். இதில், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய கிராம மக்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். மக்கள் தொகை குறைவாக உள்ள கிராமத்தை தேர்வு செய்யவேண்டும். அரசியல் தலையீடு இன்றி, உண்மையான பயனாளிகள் பட்டியலை தயாரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.