தகவல் உரிமைச் சட்டத்தில் சி.பி.ஐ.,க்கு விலக்கு சரியே: ஐகோர்ட் தீர்ப்பு
தகவல் உரிமைச் சட்டத்தில் சி.பி.ஐ.,க்கு விலக்கு சரியே: ஐகோர்ட் தீர்ப்பு
ADDED : செப் 09, 2011 09:11 PM

சென்னை : 'தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், சி.பி.ஐ.,க்கு விலக்கு அளித்து, மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் விஜயலட்சுமி தாக்கல் செய்த மனுவில், 'தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், சி.பி.ஐ.,க்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவு, கடந்த ஜூன் மாதம் பிறப்பிக்கப்பட்டது. சி.பி.ஐ., ஒரு புலனாய்வு அமைப்பு. இதற்கு, ஒட்டுமொத்த விதிவிலக்கு அளிக்க முடியாது. விதிவிலக்கு அளித்தது, அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாகும். எனவே, மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.மனுவை, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரித்தது. மத்திய அரசு சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கவுரவ் பானர்ஜி, மத்திய அரசு மூத்த வழக்கறிஞர் பி.சந்திரசேகரன், சி.பி.ஐ., சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரன், சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.சந்திரசேகரன் ஆஜராகினர்.
'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கப்பட்ட பல வழக்குகளைப் பார்க்கும் போது, நுண்ணறிவு விசாரணை மூலம், முக்கிய வழக்குகளில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் எல்லாம், தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவை. எனவே, மத்திய அரசின் நுண்ணறிவுப் புலனாய்வு ஏஜன்சி என, சி.பி.ஐ., அமைப்பைக் கருத முடியும்.பொது மக்களின் நலன் தொடர்பான பல முக்கிய வழக்குகளை, சி.பி.ஐ., கையாள்கிறது. இந்த வழக்குகள் தொடர்பான தகவலை வெளியிட்டால், அதனால், இந்தியாவுக்குள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் விளைவுகள் ஏற்படும். அவர்களின் பணிகளும் பாதிக்கும். மேலும், சி.பி.ஐ., நடத்தும் விசாரணை, நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.நாட்டின் பாதுகாப்பு தொடர்பான முக்கிய வழக்குகளையும், சி.பி.ஐ., கையாண்டு வருகிறது. எனவே, சி.பி.ஐ.,க்கு உள்ள விசாரணை அதிகாரம், சட்டத்துக்குக் கட்டுப்பட்டது. இந்த அதிகாரத்தில், நிர்வாக உத்தரவுகள் மூலம் குறுக்கிடக் கூடாது. விஜிலன்ஸ் வழக்குகளில் முதல் கட்டம், புலனாய்வுக் கட்டம், வழக்கு தொடரும் கட்டம் என தகவல் அளித்தால், தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். விசாரணைக்கு குந்தகத்தை ஏற்படுத்தும்.
சி.பி.ஐ.,க்கு விலக்கு அளித்து, மத்திய அரசு உத்தரவு பிறப்பிப்பதற்கு முன், அரசிடம் அனைத்து விவரங்களும் வைக்கப்பட்டுள்ளன. செயலர்கள் அடங்கிய கூட்டம் மற்றும் அதிகாரிகள், இதை கவனத்தில் கொண்டுள்ளனர். முடிவெடுக்கும் நடவடிக்கையில், எந்தக் குற்றச்சாட்டும் கூறப்படவில்லை.பார்லிமென்டின் இரண்டு சபைகளிலும், மத்திய அரசின் உத்தரவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார். மத்திய அரசின் உத்தரவானது, தகவல் பெறும் உரிமைச் சட்டம், அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாக இல்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.