விருப்ப மனுக்களை யாரிடம் பெறுவது?குமரி மாவட்ட காங்கிரசில் புது குழப்பம்
விருப்ப மனுக்களை யாரிடம் பெறுவது?குமரி மாவட்ட காங்கிரசில் புது குழப்பம்
ADDED : செப் 19, 2011 11:49 PM

நாகர்கோவில்:உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை, இரண்டு கோஷ்டிகள் தனித்தனியாக வழங்குவதால், யாரிடம் வாங்குவது என்ற புது குழப்பம், தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்ட கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயபால் இறந்தார்.
அதன் பின், புதிய தலைவர் நியமிக்காமலேயே தேர்தலை காங்கிரஸ் சந்தித்தது. குளச்சல் தொகுதிக்கு தங்கபாலுவின் ஆதரவாளர் ராபர்ட்புரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, பின் மாற்றப்பட்டார்.
புதிய வேட்பாளராக மேற்கு மாவட்ட தலைவர் பிரின்ஸ் அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றார். அதன் பின், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக ராபர்ட் புரூஸ் நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு பிரிவினர், அவரை நாகர்கோவில் கட்சி அலுவலகத்துக்குள் வைத்து பூட்டினர். போலீசார் வந்து அவரை மீட்டனர். இதனால், ராபர்ட் புரூஸ் புதிய அலுவலகத்தை திறந்து, உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனுக்களை வழங்கி வருகிறார்.இந்நிலையில், எம்.எல்.ஏ.,க்கள் ஜான்ஜேக்கப், பிரின்ஸ், நாகர்கோவில் நகராட்சித் தலைவர் அசோகன்சாலமன் ஆகியோர், ஏற்கனவே செயல்பட்டு வந்த காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு, உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனுக்களை தொண்டர்களுக்கு வழங்கினர்.
பின் பேட்டியளித்த எம்.எல்.ஏ.,க்கள், 'உள்ளாட்சித் தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள மாநிலக்குழுவின் பரிந்துரை படி விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மாநிலக்குழு உறுப்பினர் வந்து வேட்பாளர்களை தேர்வு செய்வர்' என்றும் தெரிவித்தனர்.ஆனால், கிழக்கு மாவட்டத்தில் விருப்ப மனுக்கள் கொடுக்க இரண்டு எம்.எல்.ஏ.,க்களுக்கும் அதிகாரம் இல்லை என, ராபர்ட்புரூஸ் கூறியுள்ளார். இதனால், தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.இதற்கிடையில், முன்னாள் தலைவர் இளங்கோவன், இன்று நாகர்கோவில் வருகிறார்.

