பா.ஜ.,வுடன் கொ.மு.க., கூட்டணி: கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க., தி.மு.க.,வுக்கு சவால்
பா.ஜ.,வுடன் கொ.மு.க., கூட்டணி: கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க., தி.மு.க.,வுக்கு சவால்
ADDED : செப் 23, 2011 11:51 PM

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில், முதல் கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.,வும், கொங்குநாடு முன்னேற்றக் கழகமும் கூட்டணி அமைத்து, உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கின்றன. கொங்கு மண்டலத்தில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வுக்கு சவால்விடும் வகையில், இக்கூட்டணி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பார்லிமென்ட் மற்றும் சட்டசபைத் தேர்தலில், தனித்துவிடப்பட்டிருந்த பா.ஜ., கட்சிக்கு, நீண்ட இடைவெளிக்குப் பின், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் கை கொடுத்துள்ளது. இக்கட்சி, சட்டசபைத் தேர்தலில் தி.மு.க., அணியில் இருந்தது. கோவை, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல் மாவட்டங்களில், பார்லிமென்ட் மற்றும் சட்டசபைத் தேர்தலில், கணிசமான வாக்குகளை கொங்குநாடு முன்னேற்றக் கழகம் பெற்றுள்ளது. இந்த மாவட்டங்களில், பா.ஜ.,வும் தனக்கென ஓட்டு வங்கியை வைத்துள்ளது. இவ்விரு கட்சிகளின் கூட்டணி, கொங்கு மண்டலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில், பெருவாரியான இடங்களைப் பிடித்துவிடலாம் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
கூட்டணி குறித்து, பா.ஜ., மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: எங்களுடன் கூட்டணி அமைக்க விரும்புவோரிடம், உள்ளாட்சித் தேர்தலில் இணைந்து செயல்படுவோம் என, ஏற்கனவே அறிவித்திருந்தோம். அதுபோல, எங்களுடன் இணைந்து போட்டியிட, கொங்குநாடு முன்னேற்றக் கழகம் முன்வந்தது. அவர்களுடன் கூட்டணி அமைத்து, உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கிறோம். தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க., கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தனித்துவிடப்பட்டுள்ளன. உள்ளாட்சித் தேர்தலில் தனித்து நிற்பது போல், வேட்பாளர்களை அ.தி.மு.க., அறிவித்து வருகிறது. இந்த முடிவை சட்டசபைத் தேர்தலில் எடுத்திருந்தால், அ.தி.மு.க.,வின் உண்மை பலம் தெரிந்திருக்கும். இவ்வாறு, பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.