சிறப்பு எஸ்.ஐ., போலீசார்களுக்கு டிரான்ஸ்பர்: குமுறும் போலீசார்.
சிறப்பு எஸ்.ஐ., போலீசார்களுக்கு டிரான்ஸ்பர்: குமுறும் போலீசார்.
ADDED : செப் 10, 2011 01:14 AM
சிவகங்கை : 'மாவட்டத்தில் சிறப்பு எஸ்.ஐ., போலீசார் 330 பேருக்கு 'டிரான்ஸ்பர்' வழங்குவதால், குழந்தைகளின் கல்வி பாதிக்கும்,' என, போலீசார் புலம்புகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்தூர், தேவகோட்டை, மானாமதுரை சப்- டிவிஷனின் கீழ், குறைந்த பட்சம் 2 ஆண்டு முதல் அதிக பட்சம் 9 ஆண்டுகள் வரை ஒரே ஸ்டேஷனில் பணியாற்றும் சிறப்பு எஸ்.ஐ., போலீசார்களை பணியிட மாற்றம் செய்வதென, பன்னீர்செல்வம் எஸ்.பி., முடிவு செய்துள்ளார்.
இதற்காக, போலீசாரின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளன. செப்.,12ல் இவர்களுக்கு டிரான்ஸ்பர் வழங்கப்படும் என தெரிகிறது.அதன்படி, 2 முதல் அதிகபட்சம் 9 ஆண்டுகள் வரை ஒரே இடத்தில் பணியாற்றிய சிறப்பு எஸ்.ஐ., போலீசார் 330 பேருக்கு டிரான்ஸ்பர் வழங்கப்பட உள்ளது.
குமுறல்:பொதுவாக, அரசு ஊழியர்களுக்கு கோடை விடுமுறையான ஏப்ரல், மே-மாதத்தில் தான் டிரான்ஸ்பர் வழங்கப்படும். இதனால், ஊழியர்களின் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதில் பிரச்னை இருக்காது. ஆனால், சிவகங்கை போலீசாருக்கு இடைப்பட்ட காலத்தில் டிரான்ஸ்பர் வழங்குவதால், மற்ற பள்ளிகளில் சேர்ப்பதில் சிரமம் ஏற்படும் என புலம்புகின்றனர். எனவே, டிரான்ஸ்பரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவேண்டும் என போலீசார் எதிர்பார்க்கின்றனர்.
பன்னீர்செல்வம் எஸ்.பி., கூறுகையில்: போலீசாரிடம், விருப்பமான 3 இடத்தை தேர்வு செய்து தருமாறு கேட்டு, அதில் ஒரு இடத்திற்கு தான் டிரான்ஸ்பர் செய்கிறோம். 320 பேருக்கு விருப்பம் கேட்டும், 10 பேர் நிர்வாக நலன் கருதி கட்டாய மாற்றம் செய்கிறோம். இதில், சொந்த ஊர், ஏற்கனவே பணியாற்றிய இடத்திற்கு டிரான்ஸ்பர் வழங்கப்படமாட்டாது. குழந்தைகளின் கல்வி பாதிக்காத வகையில், கல்வி ஆண்டு முடியும் வரை, தற்போது உள்ளபடியே போலீஸ் குடியிருப்புகளில் குடியிருக்க அனுமதி தரப்படும் என்றார்.