தாராபுரம் அ.தி.மு.க., தொகுதி செயலர் மீது வழக்கு பதிவு
தாராபுரம் அ.தி.மு.க., தொகுதி செயலர் மீது வழக்கு பதிவு
ADDED : செப் 10, 2011 01:27 AM
திருப்பூர்: போலி பத்திரம் தயாரித்து நிலத்தை விற்றதாக, தாராபுரம் அ.தி.மு.க., தொகுதி செயலர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பெரிய அக்ரஹாரம் கட்டபொம்மன் வீதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம்; இவரின் மனைவி தேன்மொழி,45; பன்னீர்செல்வத்துக்கு, தாராபுரம் பூளவாடி ரோடு பகுதியில், 1.21 ஏக்கர் நிலம் உள்ளது.
கடந்தாண்டு, தன் பெயரில் இருந்த இந்நிலத்தை, தன்னுடைய மனைவி தேன்மொழிக்கு, சுவாதீனம் செய்து கொடுத்தார்.
நிலத்தைப் பார்க்க தேன்மொழி சென்றபோது, நஞ்சியம்பாளையத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், அந்நிலத்துக்கு போலி பத்திரம் தயாரித்து விற்றது தெரியவந்தது.இவர், அ.தி.மு.க., தாராபுரம் தொகுதி செயலர். பன்னீர்செல்வம், கோவிந்தராஜிடம் கடன் வாங்கியது போலவும், அப்பணத்தை வட்டியுடன் திருப்பித் தர முடியாமல், 1.21 ஏக்கர் நிலத்தை, அவருக்கு எழுதிக் கொடுத்தது போலவும், பத்திரம் தயாரித்து, அந்நிலத்தை கோவிந்தராஜ் விற்றது தெரியவந்தது. அந்நிலத்தின் தற்போதைய மதிப்பு, 1.5 கோடி ரூபாய்.தாராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.