sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கேரள முதல்வரின் ஆணை; கை நழுவப்போகிறது பரம்பிக்குளம் அணை!

/

கேரள முதல்வரின் ஆணை; கை நழுவப்போகிறது பரம்பிக்குளம் அணை!

கேரள முதல்வரின் ஆணை; கை நழுவப்போகிறது பரம்பிக்குளம் அணை!

கேரள முதல்வரின் ஆணை; கை நழுவப்போகிறது பரம்பிக்குளம் அணை!


UPDATED : செப் 18, 2011 10:35 PM

ADDED : செப் 18, 2011 09:24 PM

Google News

UPDATED : செப் 18, 2011 10:35 PM ADDED : செப் 18, 2011 09:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:பரம்பிக்குளம் அணைப்பகுதிக்கு கேரளாவிலிருந்து நேரடி வழித்தடம் அமைப்பதால், ஏராளமான கேரள வனப்பரப்பு அழிவதுடன், பரம்பிக்குளம் அணை, தமிழகத்திடமிருந்து கை நழுவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்டத்தின் பிரதான அணையான பரம்பிக்குளம் அணை, கேரள வனப்பகுதியில் உள்ளது.

தமிழக அரசின் பொதுப்பணித்துறையால் கட்டப்பட்ட இந்த அணை, இப்போதும் நமது பொதுப்பணித்துறையின் பராமரிப்பிலேயே உள்ளது. அணை அமைந்துள்ள வனப்பகுதி, கேரள வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.



இந்த அணைப்பகுதிக்குச் செல்வதற்கு, தமிழகத்திலுள்ள சேத்துமடை வழியாக, ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட டாப்ஸ்லிப் வனப்பகுதியைக் கடந்தே செல்ல வேண்டும். இதற்கு தமிழக வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். பரம்பிக்குளம், டாப்ஸ்லிப் வனப்பகுதிக்கு ஒரு வழிப்பாதை மட்டுமே உள்ளதால், வனம் பாதுகாப்பாகவுள்ளது.

இந்நிலையில், இந்த அணைப்பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய காவல் நிலையத்தைத் திறந்து வைப்பதற்காக, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, கடந்த 13ம் தேதி வந்திருந்தார்.

அப்போது, 'பரம்பிக்குளம் வனப்பகுதிக்கு கேரளாவிலிருந்து நேரடியாக பாதை அமைக்க நடவடிக்கை எடுப்போம்' என அவர் அறிவித்தார்.



ஏற்கனவே, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கும், கேரளாவுக்குமான மோதல் வலுத்துவரும் நிலையில், பரம்பிக்குளம் அணைக்கு நேரடியாக வழித்தடம் அமைக்கப் போவதாக, கேரள முதல்வர் அறிவித்திருப்பது, தமிழகத்தில் பல தரப்பிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக, முல்லைப் பெரியாறு பிரச்னையில் ஆக்ரோஷமாகப் போராடி வரும் ம.தி.மு.க., இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.



முல்லைப்பெரியாறு பிரச்னையில், தமிழகத்துக்கு துரோகம் செய்வதைக் கண்டித்து, கேரள முதல்வருக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்று கைதான ம.தி.மு.க., மாவட்டச் செயலாளர் ஈஸ்வரன் இதுபற்றி கூறியதாவது:பரம்பிக்குளத்துக்கு கேரளாவிலிருந்து நேரடி வழித்தடம் அமைப்பதில், இரண்டு விதமான பாதிப்புகள் உள்ளன. 390 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டுள்ள பரம்பிக்குளம் வனம், கடந்த 2010 பிப்.,19ல் மத்திய அரசால் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த வனப்பகுதி, மிகவும் உச்சபட்சமாக பாதுகாக்கப்பட வேண்டிய வனப்பகுதியாகும்.



நேரடி வழித்தடம் அமைக்க வேண்டுமெனில், ஏராளமான வனப்பகுதியை அழிக்க வேண்டியிருக்கும். வனம், வன விலங்குகள் மற்றும் நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க உலகமெங்கும் குரல் கொடுத்து வரும் நிலையில், ஒரு மாநிலத்தின் முதல்வர் இப்படி அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது.புலிகள் காப்பகத் திட்டத்துக்காக, காலம் காலமாக வனத்துக்குள் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களையே வெளியேற்ற மத்திய அரசு இழப்பீடு வழங்கி வரும் நிலையில், 'காட்டை அழித்து ரோடு போட்டு, சுற்றுலாவை மேம்படுத்துவேன்' என்று கேரள முதல்வர் கூறுவது, கண்ணை விற்று சித்திரம் வாங்குவதற்குச் சமம்.அடுத்ததாக, பரம்பிக்குளம் அணைக்கு கேரள வனப்பகுதியில் பாதை அமைப்பதன் மூலமாக, அணையின் கட்டுப்பாட்டை தமது பிடிக்குள் கொண்டு வர வேண்டுமென்பதே கேரள அரசின் மறைமுக நோக்கம்.



ஏற்கனவே, முல்லைப்பெரியாறு, சிறுவாணி அணைகளில் கேரள அரசு செய்து வரும் அத்துமீறல், உலகிற்கே தெரிந்ததுதான்.கேரள அரசின் இந்த முயற்சிக்கு, மத்திய அரசு எந்த வகையிலும் உடன்படக்கூடாது. அவ்வாறு அனுமதிக்கும்பட்சத்தில், எதிர்காலத்தில் இரு மாநில உறவுகளும் கடுமையாக பாதிக்கப்படும். இந்த விஷயத்தில், பரம்பிக்குளம் அணையை எக்காரணத்தை முன்னிட்டும் விட்டுக் கொடுக்காமல் போராட வேண்டியது, தமிழகத்திலுள்ள விவசாயிகளின் கடமையாகும்.இவ்வாறு, ஈஸ்வரன் தெரிவித்தார்.



இதே கருத்தை 'ஓசை', தமிழக பசுமை இயக்கம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் அமைப்புகளும் வலியுறுத்துகின்றன. பரம்பிக்குளம் அணைப்பகுதியில் ரோடு அமைக்க முயற்சி செய்தால், அனைத்து சூழல் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து சட்டரீதியாகவும், நேரடியாகவும் போராடவும் இந்த அமைப்புகள் ஆலோசித்து வருகின்றன.



விழிப்பார்களா விவசாயிகள்?பரம்பிக்குளம் -ஆழியாறு பாசனத் திட்டத்தின் உயிர்நாடியாக விளங்குவது பரம்பிக்குளம் அணை தான். இந்த அணையின் மொத்த கொள்ளளவு, 17.5 டி.எம்.சி.,ஆகும். முல்லைப் பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவு 15.5 டி.எம்.சி.,மட்டுமே. அந்த அணைக்கு இப்போது ஏற்பட்டுள்ள கதி, பரம்பிக்குளம் அணைக்கும் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது.



கேரளாவிலிருந்து நேரடி வழித்தடம் அமைத்தால், நமது பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டிலிருந்து அணை கை நழுவும் அபாயம் உள்ளது. அப்படி நடந்தால், பி.ஏ.பி., பாசனத் திட்டத்தில் பயன் பெறும் நான்கரை லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களும், இத்திட்டத்தால் குடிநீர் வசதி பெறும், பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களும் பாதிக்கப்படும். விரிசல் பட்டுக்கிடக்கும் விவசாய அமைப்புகள், இதிலாவது ஒன்று திரண்டு போராடினால்தான் இதைத்தடுக்க முடியும்.








      Dinamalar
      Follow us