ADDED : ஜூலை 15, 2011 12:49 AM
சென்னை:செங்கல், ஜல்லி விலையை குறைப்பதாக, முதல்வரை சந்தித்த அதன் உரிமையாளர்கள் சங்கத்தினர் உறுதியளித்தனர். இதன்படி, செங்கல் ஒரு லோடுக்கு, 3,000 ரூபாயும், ஜல்லி இரண்டு யூனிட்டுக்கு, 700 ரூபாயும் குறைக்கப்படுகிறது.தமிழ்நாடு செங்கல் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் ரத்தினசேகர் தலைமையில், அதன் நிர்வாகிகள், முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்தனர். அப்போது, முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், வருடாந்திர கட்டண முறை கொண்டு வரப்பட்டது என்றும், தற்போது ஒவ்வொரு ஆண்டும் கட்டணம் கட்டும் முறையை மாற்றி, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மொத்தமாக கட்டணம் செலுத்த ஆவன செய்ய வேண்டுமென, முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.அவர்களது கோரிக்கைகளை கேட்ட முதல்வர் ஜெயலலிதா, கட்டுமானப் பொருட்களின் விலை அதிகமாக உள்ளதால், செங்கல் விலை உயர்வு ஏழை, நடுத்தர மக்களை பெரிதும் பாதித்துள்ளது என்றும், செங்கல் விலையை குறைக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார். இதை ஏற்று, தற்போதைய விலையில் இருந்து, லோடு ஒன்றுக்கு, 3,000 ரூபாய் அளவுக்கு குறைப்பதாக, செங்கல் உற்பத்தியாளர் சங்க கூட்டமைப்பினர், முதல்வரிடம் உறுதியளித்தனர்.இதனால், ஒரு செங்கலின் விலை, 5.50 ரூபாயில் இருந்து, 4.50 ரூபாயாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதேபோல, கல் குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சின்னசாமி தலைமையில், அதன் பிரதிநிதிகள், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர். அப்போது, கல்குவாரிகளில் தற்போதுள்ள நடை சீட்டு முறைக்கு பதிலாக, பரப்பளவு அடிப்படையில் ஆண்டு குத்தகை தொகையை நிர்ணயிக்க வேண்டும் என்றும், இதனால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் தெரிவித்தனர்.இதுதவிர, கல்குவாரிக்கு தேவையான வெடிமருந்து பொருட்களை அரசு வெடிமருந்து நிறுவனத்திடம் இருந்து முகவர்கள் இல்லாமல் நேரடியாகவே, மாவட்ட சங்கம் மூலம் கிடைக்க ஆவன செய்யும்படி கோரினர்.
கல் குவாரிகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை லைசென்ஸ் வழங்கப்படுகிறது. இதை மாற்றி, கிரானைட் குவாரிகளுக்கு உள்ளது போல, 20 ஆண்டுகளுக்கு லைசென்ஸ் வழங்க வேண்டுமென வலியுறுத்தினர்.இவற்றை கேட்ட முதல்வர் ஜெயலலிதா, பொதுமக்களின் நலன் கருதி, ஜல்லி விலையை குறைக்க வேண்டுமென அறிவுறுத்தினார். இதை ஏற்று, லோடு ஒன்றுக்கு, 700 ரூபாய் குறைப்பதாக அவர்கள் உறுதியளித்தனர்.இதன்படி, தற்போது இரண்டு யூனிட் ஜல்லி, 4,400 ரூபாய்க்கு விற்கப்படுவது, இனி, 3,700 ரூபாய்க்கு விற்கப்படும்.