டாஸ்மாக் அதிகாரி லஞ்சம் வாங்கிய வழக்கு:வேளாண் துறை துணை ஆணையர் சாட்சியம்
டாஸ்மாக் அதிகாரி லஞ்சம் வாங்கிய வழக்கு:வேளாண் துறை துணை ஆணையர் சாட்சியம்
ADDED : ஜூலை 15, 2011 02:46 AM
கடலூர்:கடலூர் மாவட்ட டாஸ்மாக் உதவி மேலாளர் லஞ்சம் வாங்கிய வழக்கில் வேளாண் துணை ஆணையர் கோர்ட்டில் சாட்சியளித்தார்.கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த புதுவிளாககுளத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். கடந்த ஆண்டு நெய்வேலி அடுத்த கங்கைகொண்டான் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றியபோது பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். ராஜமாணிக்கம் மீண்டும் பணியில் சேர டாஸ்மாக் உதவி மேலாளர் பட்டுசாமியை சந்தித்தார். மீண்டும் பணியில் சேர்ப்பதற்கான உத்தரவு வழங்க, பட்டுசாமி 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
ராஜமாணிக்கம் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். கடந்த ஆண்டு மார்ச் 12ம் தேதி போலீசார் கொடுத்த 3,000 ரூபாயை பட்டுசாமியிடம் ராஜமாணிக்கம் கொடுத்தார். மாறுவேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பட்டுசாமியை கைது செய்தனர். மேலும் அன்றைய தினம் டாஸ்டமாக் ஊழியர்கள் ஸ்ரீமுஷ்ணம் கோவிந்தசாமி, அர்ஜூனன் ஆகியோருக்கு மாறுதல் வழங்க தலா ரூ.500 லஞ்சம் பெற்றதும் விசாரணையில் தெரியவந்தது.இந்த வழக்கு கடலூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த விசாரணையின் போது, கடந்த ஆண்டு டாஸ்மாக் நிர்வாக இயக்குனராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தீப் சக்சேனா வழக்குத்தொடர்பாக நேற்று கடலூர் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நீதிபதி சண்முகநாதன் முன்னிலையில் ஆஜராகி ஒரு மணி நேரம் சாட்சியளித்தார்.