ADDED : ஜூலை 24, 2011 06:22 PM
ஈரோடு: தமிழக இளைஞர் காங்கிரஸ் பாதயாத்திரையில் கலந்து கொண்டவர்களுக்கு பாராட்டு, சான்றிதழ் வழங்கும் விழா, ஈரோடு வேளாளர் கல்லூரியில், இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் யுவராஜா தலைமையில் நடந்தது.அதில் யுவராஜா பேசியதாவது:தமிழக உள்ளாட்சி தேர்தலில், இளைஞர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட, 7,100 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.
உள்ளாட்சி தேர்தலில் இளைஞர் காங்கிரசுக்கு முக்கியத்துவம் அளிக்க, தலைமையை வலியுறுத்துவேன். பாதயாத்திரையில் பங்கேற்ற 135 பேருக்கு, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வாங்கித் தருவேன்.ஈழத்தமிழர்களின் மறுவாழ்வுக்கு மத்திய அரசு, 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நாங்களும், 68 இலங்கை தமிழர் முகாமுக்கு சென்று பார்வையிட்டு, அவர்கள் கோரிக்கையை ராகுலிடம் தெரிவித்துள்ளோம். இலங்கை தமிழர்களுக்கு, காங்., எதுவும் செய்யாதது போல் சிலர் போலி தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர்.இயக்குனர் சீமான், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக பேசி வருகிறார். காங்., கட்சியை கொச்சையாக விமர்சிக்கிறார். சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்படும் என, புதிய அரசு அறிவித்துள்ளது. ஆனால், இதுவரை சீமானை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது. அவரை கைது செய்ய வலியுறுத்தி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் நாளை (இன்று) கோரிக்கை மனு அளிக்கப்படும்.சட்டசபை தேர்தலில் ஈரோடு, திருப்பூர் சாயக்கழிவு பிரச்னையை தீர்ப்பதாகவும், மணல் கடத்தலை தடுப்பதாகவும் பிரசாரம் செய்து அ.தி.மு.க., வெற்றி பெற்றது. ஆனால், சாயக்கழிவு பிரச்னைக்கு, மத்திய அரசு ஒதுக்கிய நிதியை முறையாக பயன்படுத்தவில்லை.சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்ததால்தான், காங்கிரஸ் தோல்வி அடைந்தது. தெரிந்தே கூட்டணி அமைத்து தோல்வி அடைந்தோம்.இவ்வாறு யுவராஜா பேசினார்.