ADDED : ஜூலை 29, 2011 11:46 PM
சென்னை: சென்னை ஐகோர்ட்டுக்கு வெளியே, சமச்சீர் கல்வி தொடர்பாக தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.
வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததால், திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து கொண்டிருக்க, சமச்சீர் கல்வியை உடனே அமல்படுத்தி, மாணவர்களுக்கு புத்தகங்களை வினியோகிக்க வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க., சார்பில் நேற்று வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று பிற்பகல் சென்னை ஐகோர்ட் வெளியே, என்.எஸ்.சி., போஸ் சாலையில் சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி தி.மு.க., வழக்கறிஞர்கள் இளம்பரிதி, கணேசன் உள்ளிட்டோர் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதே நேரத்தில், சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டாம் என கோரிக்கை வைத்தும், மாணவர்களைப் போராட்டத்துக்குத் தூண்டும் தி.மு.க.வை கண்டித்தும் அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் பாலமுருகன், மதுரைவீரன் உள்ளிட்டோரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் ஒரே நேரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பினர்.