UPDATED : ஆக 20, 2011 09:59 PM
ADDED : ஆக 20, 2011 09:05 PM
தூத்துக்குடி: தூத்துக்குடியில், ரூ.5 கோடி கேட்டு சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், இவர்களது வீட்டு கார் டிரைவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர்.
மிரட்டல் மூலம் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு, இச்சம்பவத்தில் அவர்கள் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.தூத்துக்குடி, பிரையண்ட் நகர் ஷிப்பிங் கம்பெனி உரிமையாளர் ராஜ்குமார். இவரது மனைவி பிளவர், மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலர்; சினிமா தயாரிப்பாளர். இவர்களது நான்கரை வயது மகன் எல்.கே.ஜி.,படிக்கும் விஷால் உமேஷ், அக்.,17 காலை பள்ளிக்கு காரில் சென்றபோது கடத்தப்பட்டான். அவனை விடுவிக்க கடத்தல்காரர்கள், ரூ. 5 கோடி கேட்டு பெற்றோரிடம் மிரட்டினர். கடத்தலுக்கு கடன்பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. டிரைவரும் கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. பல்வேறு இடங்களில் போலீசார் அவர்களை தேடிவந்தநிலையில், அக்.,18 இரவு 8.40 மணிக்கு சிறுவன் விஷால் உமேஷ், கார் டிரைவர் பாலகருப்பசாமியுடன் தென்பாகம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தான். மர்ம நபர்கள் தங்களை இறக்கிவிட்டு சென்றதாக டிரைவர் பால கருப்பசாமிகூறினார். அவரிடமும், விஷால் உமேஷ் மற்றும் பெற்றோரிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்தனர். பாலகருப்பசாமி கூறியதற்கும், சிறுவன் கூறியதற்கும் ஏராளமான முரண்பாடுகள் இருந்தன. இதனால், அவரிடம் 'முறையாக' நடத்தப்பட்ட விசாரணையில், பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு சிறுவனை, நண்பர்களுடன் சேர்ந்து கடத்தியதை ஒப்புக்கொண்டார். டிரைவர் பாலகருப்பசாமி அளித்துள்ள வாக்குமூலத்தில்,'' சரியாக கார் ஓட்டவில்லை எனக்கூறி, என்னை ராஜ்குமார் மூன்று மாதத்திற்கு முன் பணியிலிருந்து நீக்கினார். பின்னர், கடந்த 20 நாளிற்கு முன் அவரிடம் மீண்டும் பணியில் சேர்ந்தேன். அவர் பணக்காரர் எனத்தெரிந்துகொண்ட நான், அவரை மிரட்டி பணம் சம்பாதிக்க நினைத்தேன். அதனால், சம்பவத்தன்று அவர்களது காரிலேயே மகன் விஷால் உமேஷை எனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்தினேன். சிறுவனை முத்தையாபுரத்தில் வாடகை வீட்டில் அடைத்து வைத்தோம். அந்த காரில் திருச்செந்தூர் சென்ற நாங்கள், அதை அங்கு விட்டுவிட்டு, பைக்கில் மாவட்டத்தின் பல இடங்களிலும் சுற்றினோம். சிறுவன் பெற்றோரிடம், முதலில் ரூ.5 கோடி கேட்டு மொபைல்போனில் மிரட்டினோம். பின்னர், ரூ. 75 லட்சம் கேட்டோம். ஆனால், அதற்கும் குறைவான பணத்தை அவர்கள் 17ம்தேதி இரவு புதுக்கோட்டை அருகே கொண்டு வந்தபோது, அவர்களுடன் மாறுவேடத்தில் போலீஸ் இருந்ததால், பணம் வாங்காமல் தப்பியோடினோம். மறு நாள் காலை நாளிதழ்களில் செய்தி வந்தவுடன், எங்களுக்கு பயம் ஏற்பட்டது. பிரச்னை பெரிதானதால் வேறு வழியின்றி 18ம்தேதி இரவு சிறுவனுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து, எங்களை கடத்தல்காரர்கள் விடுவித்ததுபோல நடித்தேன்,'' என்றார். இவரையும், கடத்தலுக்கு உதவிய இவரது நண்பர்கள் நல்லமலை மகேஷ், கிருஷ்ணராஜபுரம் அசோக், லட்சுமிகாந்தன் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடிவருகின்றனர்.