ADDED : செப் 09, 2011 12:25 AM

கோவை: மில் அதிபரை கடத்தி, கடுமையாக தாக்கி 125 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அபகரித்த புகாரில் லாட்டரி அதிபர் மார்ட்டின் உட்பட இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
தலைமறைவான, ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி., துரை உள்ளிட்ட பலரை போலீஸ் தேடுகிறது. கோவை, கணபதியைச் சேர்ந்தவர் நரஹரசெட்டி. இவருக்கு சொந்தமாக இப்பகுதியில் அட்சயா டெக்ஸ்டைல்ஸ் எனும் மில் உள்ளது. நலிவடைந்த நிலையில் இருந்த மில்லை, அபிவிருத்தி மேற்கொள்ள, லாட்டரி அதிபர் மார்ட்டினிடம் சில ஆண்டுகளுக்கு முன், 10 கோடி ரூபாய் கடன் வாங்கினார். இக்கடன் தொகைக்கு எவ்வித உத்தரவாதமும் பெறவில்லை. கொடுத்த கடனை கேட்டு தொந்தரவும் செய்யவில்லை. இச்சூழலில், சில மாதங்களுக்கு முன், கொடுத்த கடனை மார்ட்டின் தரப்பு திருப்பிக் கேட்டது. அதிர்ச்சி அடைந்த நரஹர செட்டி, வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாத நிலையை விளக்கினார்.
மில் உரிமையாளரின் பதிலை கண்டுகொள்ளாத மார்ட்டின் தரப்பினர், மர்ம இடத்துக்கு கடத்தி, கட்டாயப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்து மில்லின் உரிமையில் 90 சதவீத பங்கை வாங்கிக் கொண்டதாக கையெழுத்துப் பெற்றனர். இது தொடர்பாக, அப்போதே சரவணம்பட்டி போலீசில் நரஹரசெட்டி புகார் கொடுத்தார். போலீசார் விசாரிக்காமல் விட்டு விட்டனர். சமீபத்தில், கோவை மாவட்ட எஸ்.பி., இடம் புகார் செய்யப்பட்டது.
இவ்வழக்கை மாவட்ட குற்றப்புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், மில் உரிமையாளரை மிரட்டி 125 கோடி ரூபாய் மதிப்பிலான மில்லை வாங்கியதாக, லாட்டரி அதிபர் மார்ட்டின், பெஞ்சமின், சார்லஸ், கிரன்குமார், ஆஞ்சநேயலு, ஓய்வுபெற்ற ஏ.டி.எஸ்.பி., துரை உட்பட 16 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட ஏ.டிஎஸ்.பி., துரை உட்பட பலர் தலைமறைவாகி உள்ள நிலையில், மார்ட்டின், பெஞ்சமின் ஆகியோர் நிலமோசடி வழக்கில் கைதாகி, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று காலை இருவரையும் கைது செய்து, பலத்த பாதுகாப்புடன் கோவை அழைத்து வந்தனர். மாலை 6.10 மணிக்கு இருவரையும் ஜே.எம்.எண்: 2 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் செல்லபாண்டியன் விசாரித்து, இருவரையும் வரும் 12ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
முன்னதாக, மார்ட்டினை விசாரிக்க மூன்று நாள் கஸ்டடி கேட்டு போலீசார் மனு தாக்கல் செய்தனர். இம்மனு மீதான விசாரணை வரும் திங்களன்று நடக்கும் என, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, லாட்டரி அதிபர் மார்ட்டின், இவருடன் கைது செய்யப்பட்ட பெஞ்சமின் இருவரும், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இன்று காலை மீண்டும் வேலூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். கோவை கோர்ட்டுக்கு மார்ட்டின் கொண்டு வருவதையடுத்து, ஆயுதப்படை போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.