நூறு வார்டுகளில் எத்தனை மிச்சம்?; ஆளும்கட்சியினர் அச்சம்!
நூறு வார்டுகளில் எத்தனை மிச்சம்?; ஆளும்கட்சியினர் அச்சம்!
ADDED : செப் 14, 2011 12:10 AM

கோவை : கோவையிலுள்ள 100 வார்டுகளில், கூட்டணிக் கட்சிக்கு அதிக வார்டுகள் ஒதுக்கப்பட வேண்டி இருப்பதால், விருப்ப மனு கொடுத்துள்ள ஆளும்கட்சி நிர்வாகிகள் கலக்கமடைந்துள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.,வினரிடம் இருந்து விருப்ப மனுக்கள், கடந்த 11ம் தேதி வரையிலும் பெறப்பட்டன. கோவை மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளில் போட்டியிட 1,100 க்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர். வார்டுக்கு 11 பேர் வரை விருப்ப மனு கொடுத்து விட்டு, ஆவலுடன் காத்திருக்கின்றனர்.கோவை மேயர் பதவிக்கு 48 பேரும், மேட்டுப்பாளையம் நகராட்சித் தலைவர் பதவிக்கு 10 பேரும் விருப்ப மனு கொடுத்துள்ளனர். நகராட்சி கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் போன்ற பதவிகளுக்கும் ஒரு வார்டுக்கு 5லிருந்து 10 பேர் வரை விருப்ப மனு கொடுத்துள்ளதாக, மாநகர் மாவட்ட அ.தி.மு.க.,செயலர் மலரவன் தெரிவித்தார்.விருப்ப மனு கொடுத்துள்ளவர்களில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை விட, எந்த வார்டு எந்தக் கட்சிக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பே ஆளும்கட்சியினரிடம் எகிறியுள்ளது. அ.தி.மு.க., கூட்டணியில் அதிகமான கட்சிகள் இடம் பெற்றிருப்பதே இதற்குக் காரணம். அ.தி.மு.க.,வினரைப் போலவே, இந்த கட்சியினரும் 'கவுன்சிலர் கனவு'களில் மிதந்து வருகின்றனர்.
தே.மு.தி.க.,வில் கோவை மேயருக்கு 44 பேரும், 100 வார்டுகளில் போட்டியிட 400க்கு மேற்பட்டவர்களும் விருப்ப மனு கொடுத்திருப்பதே இதை வெளிப்படுத்துகிறது. அ.தி.மு.க.,விலுள்ள இரண்டாவது பெரிய கட்சி என்பதால், இந்தக் கட்சிக்கு 2 மாநகராட்சிகளின் மேயர் பதவி ஒதுக்கப்படும் என்ற தகவல், கட்சி வட்டாரத்தில் பரவிக்கிடக்கிறது.கோவை மேயர் பதவியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷமென்கின்றனர் கட்சி நிர்வாகிகள். இல்லாவிட்டாலும், குறைந்தது 35 வார்டுகளையாவது வாங்கி விட வேண்டுமென்பதில் இவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த உள்ளாட்சித் தேர்தலில், தனித்துப் போட்டியிட்டு, கோவை மாநகராட்சியில் 3 வார்டுகளை தே.மு.தி.க., கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
அப்போது, கோவை மாநகராட்சியில் மொத்தம் 80 ஆயிரம் ஓட்டுக்களை வாங்கியுள்ளது. அந்த தேர்தலில், ம.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்திருந்த அ.தி.மு.க., வாங்கிய ஓட்டுக்கள், ஒரு லட்சத்து 4 ஆயிரம் மட்டுமே என்று சுட்டிக்காட்டுகின்றனர் தே.மு.தி.க., நிர்வாகிகள். இதனால், 30 வார்டுகளுக்குக் குறைவாக ஒதுக்கினால் இவர்கள் ஒப்புக்கொள்வார்களா என்பது சந்தேகமே.கம்யூ., கட்சிகளுக்கு தலா 10 வார்டுகளையாவது ஒதுக்கினால், 50 வார்டுகள் வரை, கூட்டணிக் கட்சிக்குப் போய் விடும் வாய்ப்புள்ளது. இவற்றில், யார் யாருடைய வார்டு பறி போகுமோ என்பதுதான் ஆளும்கட்சியினரின் அச்சமாகத் தெரிகிறது. ஒரு வேளை, கட்சி போட்டியிடாத வார்டுகளில் விருப்ப மனு கட்டணமாவது திரும்பக் கிடைக்குமா என்பதுதான் இவர்களின் கேள்வி.